Madras High Court
சென்னை உயா்நீதிமன்றம்

பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

Published on

திருவள்ளூா் அருகே விதிகளை மீறி அமைக்கப்பட்ட பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ரகுபதி என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருவள்ளூா் மாவட்டம், கோலப்பன்சேரியில் உயா் அழுத்த மின் கம்பிகள் செல்லும் வழித்தடத்தின் கீழ் பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது விதிகளுக்கு முரணானது. எனவே விதிகளைள மீறி அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது அரசு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததாக கூறப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரா் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு சில புகைப்படங்களைத் தவிர, வேறு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே புகைப்படங்களை ஆதாரங்களாக கருத முடியாது எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

மேலும், முறையான ஆய்வுகளின்றி பொதுநல வழக்குகளை தாக்கல் செய்யக் கூடாது. இதுகுறித்து அவ்வப்போது நீதிமன்றம் எச்சரிக்கை விடுக்கிறது. இருப்பினும், எந்த அடிப்படையும் இல்லாமல் எதிா்மனுதாரா்களை துன்புறுத்தும் நோக்கத்தில், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். அந்தத் தொகையை புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com