முதலீடு ஈர்க்கவா? குடும்ப முதலீடு செய்யவா? - முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Edappadi Palaniswami criticises Stalin's overseas visit
எடப்பாடி பழனிசாமி படம் - அதிமுக
Published on
Updated on
2 min read

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட மிக, மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஆட்சி முடிவடைய இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில், இன்று 5-ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது உண்மையிலேயே ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கச் செல்கிறாரா? அல்லது முதலீடு செய்வதற்கு செல்கிறாரா என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தெலங்கானா (அமெரிக்கா - ரூ. 31,500 கோடி) மற்றும் கர்நாடகம் (அமெரிக்கா ரூ. 25 ஆயிரம் கோடி) முதலீடுகளை ஈர்த்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆனால், ஸ்டாலின், மார்ச் 2022-ல் துபைக்கு குடும்ப சுற்றுலா (6 நாட்கள்), மே மாதம் 2023-ல் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணம் (8 நாட்கள்), ஜனவரி மாதம் 2024-ல் ஸ்பெயின் சுற்றுப்பயணம் (10 நாட்கள்), ஆகஸ்ட் 2024-ல் அமெரிக்கா சுற்றுப்பயணம் (16 நாட்கள்), என்று மொத்தம் 4 முறை, 40 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது. இதிலும், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காக போடப்பட்டவையே.

தமிழக அரசின் இன்றைய பத்திரிக்கை செய்தியின்படி 2021 முதல் இன்றுவரை சுமார் 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை எங்கள் ஆட்சியில் போடப்பட்ட தொழில் முதலீடுகளின் தொடர்ச்சியே. 4 முறை வெளிநாடு சென்று இவர் சாதித்ததாக மார்தட்டிக்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெறும் 36 மட்டுமே.

ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தைப் பற்றிய செய்தி அறிந்தவுடன், திரைப்படத் துறையில் மறைந்த 'சின்ன கலைவாணர்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட விவேக்கின் நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது.

‘இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது செய்துள்ளேனா?' என்று விவேக், அவரின் அடிபொடிகளிடம் கேட்பார் ‘ஒன்றுமே இல்லை' என்று அவர்கள் பதில் அளிப்பார்கள் உடனே விவேக் 'அதுதான் மக்களுக்கும்' - என்பார்!

அதுபோல் ஸ்டாலின் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று 4 முறை வெளிநாடுகளுக்குச் சென்றார். சொல்லும்படியாக ஏதேனும் முதலீட்டை ஈர்த்தாரா? என்றால் இல்லை என்பதே தொழில்துறையினரின் கருத்து. எனவே ஸ்டாலின், இன்று 5-ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், கடந்த சுற்றுப்பயணங்களின் போது வெளிநாட்டில் சைக்கிள் ஒட்டி பொன்னான நேரத்தை வீணடித்தது போல் செய்யாமல், இந்த முறை அதைத் தவிர்த்து தமிழகத்திற்குத் தேவையான முதலீட்டை ஈர்க்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

யோலோ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has raised questions about Chief Minister Stalin's foreign trip.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com