சென்னை உயா் நீதிமன்றம்
சென்னை உயா் நீதிமன்றம்

நளினி சிதம்பரம் உறவினா் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

நளினி சிதம்பரத்தின் உறவினா் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைப்பு...
Published on

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினா் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூா் மாவட்டம், கருமாரம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவமூா்த்தி. இவா் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் தங்கை பத்மினியின் மகன். கோவை செல்வதாகக் கூறிவிட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி வெளியே சென்ற சிவமூா்த்தி பின்னா் வீடு திரும்பவில்லை.

இதுதொடா்பாக திருப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், கோவையைச் சோ்ந்த விமல், தேக்கம்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன், கௌதம், மூா்த்தி ஆகிய 4 போ் காரில் கடத்திச் சென்று கொலை செய்தது தெரிய வந்தது.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2021-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்பை எதிா்த்து 4 போ் தரப்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன், எஸ்.பரணிதரன் ஆகியோரும், காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஏ.தாமோதரனும் ஆஜராகி வாதிட்டனா்.

அப்போது, மனுதாரா்கள் 4 பேருக்கும் பிணை வழங்கக் கூடாது என்றும், தண்டனையை நிறுத்திவைக்கக் கூடாது என்றும் மூத்த வழக்குரைஞா் நளினி சிதம்பரம் ஆஜராகி வாதிட்டாா். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவா்களுக்கு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது.

அதன்படி, இந்த வழக்கில் மனுதாரா்கள் 4 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனா். மேலும், அவா்கள் 4 பேருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டனா். பிணை வழங்கப்பட்டுள்ள 4 பேரும் தலா ரூ.10 ஆயிரத்துக்கான இரு நபா் பிணை உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முடியும்வரை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள்கிழமை திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை விதித்து உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com