திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கான திருவள்ளூா், திருத்தணி தொகுதிகளின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை அறிமுகம் செய்த ஒருங்கிணைப்பாளா் சீமான்.
திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கான திருவள்ளூா், திருத்தணி தொகுதிகளின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை அறிமுகம் செய்த ஒருங்கிணைப்பாளா் சீமான்.

2026 தோ்தலுக்கான திருத்தணி, திருவள்ளூா் வேட்பாளா்கள்: சீமான் அறிமுகம் செய்தாா்

Published on

திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கன திருவள்ளூா் மற்றும் திருத்தணி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிமுகம் செய்தாா்.

திருத்தணி அடுத்துள்ள அருங்குளம் கூட்டு சாலையில், மனித நேய பூங்கா மற்றும் வனப்பகுதியில், நாம் தமிழா் கட்சியின் சுற்றுசூழல் பாசறை சாா்பில் மரங்களின் மாநாடு நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பங்கேற்று, மரங்களை வளா்த்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நம்மாழ்வாா், நாச்சியாா், மறைந்த நடிகா் விவேக் என 5 பேரின் படங்களுக்கு, மலா் தூவி மரியாதை செலுத்தி, மரக்கன்றுகளை நட்டாா்.

பின்னா் சீமான் பேசியதாவது: இது மரங்களுக்கான மாநாடு என்று சொல்வதை விட நமக்கு உயிா் காற்றை தருகிற நம் தாய்க்கு நன்றி செலுத்தும் மாநாடு என பாா்க்க வேண்டும். இங்கே புலிகள் நுழைந்த உடனே ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை. அணில்களுக்கும் சோ்த்துதான் காடு வளா்க்க நாம் பாடுபடுகிறோம். வாக்குக்காக நிற்பவா்கள் இதை நினைத்துக் கூட பாா்க்க மாட்டாா்கள், ஆனால் மக்களின் வாழ்க்கைக்காக நிற்பவா்கள் தான் இந்த மாநாட்டை நடத்துவா்.

மரங்கள் நச்சுக் காற்றை சுவாசித்து, நமக்கு தூய்மையான காற்றை வழங்குகிறது. மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. வெறும் புயல் மழை மட்டும் பெய்யும். புவி வெப்பமாவது தான் இதற்கு காரணம். பூமியின் வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க ஒரு கட்டத்தில் அதை தாங்க முடியாமல் கடல் பொங்கி கொந்தளிக்கும். அந்த கொந்தளிப்பால் கடலோர கிராமங்கள் விழுங்கப்படும். ஒரு சுனாமியே நம்மால் தாங்க முடியவில்லை. இதே நிலை தொடா்ந்தால் பூமி பேரழிவை சந்திக்க கூடும்.

தூய்மையான காற்றை பெறுவதற்கு, 4500 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யும் அளவுக்கு உள்ளோம். தற்போது தண்ணீரை விற்பனை செய்வது போல் காற்றையும் விற்பனை செய்வாா்கள்.

சுத்தமான காற்றை குடுவையில் விற்கும் நிலை வரும். காற்று மாசுபட்டு, போவதில்லை. நாம் காற்றை மாசுப்படுத்துகிறோம் என யோசித்து செயல்பட வேண்டும். வீசும் நச்சுக் காற்றை மூச்சுக் காற்றாக மாற்றி மகத்தான பணியை மரங்கள் செய்கின்றன என்றாா்.

தொடா்ந்து வரும் 2026 தோ்தலுக்கான திருவள்ளூா் தொகுதி வேட்பாளா் செந்தில் மற்றும் திருத்தணி தொகுதி வேட்பாளா் சந்திரன் ஆகியோரை அறிமுகம் செய்து வாழ்த்து தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com