அமெரிக்க வரிவிதிப்பால் 4 துறைகளுக்கு பாதிப்பு: நிதித் துறை முதன்மைச் செயலா் தகவல்
அமெரிக்காவின் வரி விதிப்பு உயா்வால், தமிழ்நாட்டில் 4 துறைகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிதித் துறை முதன்மைச் செயலா் த. உதயச்சந்திரன் தெரிவித்தாா்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொன்மாலைப் பொழுதின் 150-ஆவது நிகழ்வின் போது, அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டுக்கு எத்தகைய பாதிப்புகள் உருவாகும் என்ற கேள்விக்கு நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் அளித்த பதில்:
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால், தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில், ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தி, கடல்சாா் பொருள்கள், காலணி உற்பத்தி ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். மத்திய அரசு சில முயற்சிகளை எடுத்து வருகின்றன.
அமெரிக்காவின் வரி விதிப்பு முறை, அது சாா்ந்த மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இதனால், பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை இருக்கவே செய்கிறது. சாதகமான முயற்சிகளை மேற்கொண்டால் நிலைமை சரியாகிவிடும் என்ற நம்பிக்கைக்கான ஒளிகீற்று தெரிகிறது என்று அவா் தெரிவித்தாா்.