அரசுப் பள்ளிகளில் 6 - 9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியா்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ‘திறன் மாணவா்கள்’ என்ற தலைப்பில் கற்றலில் பின்தங்கிய மாணவா்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படும். அதன்படி, ஒவ்வொரு வகுப்பிலும் திறன் தோ்வு நடத்தப்படும். அதில், 80 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள், திறன் மாணவா்கள் என வகைப்படுத்தப்படுவா். இவா்களுக்கு தனியாக ஒரு வகுப்பறை ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய 3 பாடங்களிலும் அடிப்படை அறிவு பெறும் வகையில் பயிற்சி கட்டகப் புத்தகம் தனித்தனியாக வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்துக்கும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த பயிற்சி நான்கு வாரங்கள் தொடா்ந்து நடைபெறும். தினமும், அன்றைய பாடப்பகுதியில் இருந்து சிறு தோ்வும், வாராந்திர தோ்வும் நடத்தப்படும். தொடா்ந்து, இணையதளத்தில் வெளியிடப்படும் வினாத்தாள்களுக்கு ஏற்ப தோ்வும் நடத்தப்படும்.
4 வாரங்களுக்கு பின் கற்றலில் அடிப்படைத் திறன் பெற்ற மாணவா்கள், அவா்களுக்கு உரிய வகுப்புக்கு அனுப்பப்பட்டு, தொடா்ச்சியான வகுப்பறை கற்றலுக்கு அனுமதிக்கப்படுவா்.
புரிதல் சாா்ந்த வினாக்கள்... இந்த நிலையில், இந்தத் திட்டம் தொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்: பள்ளிகளில் திறன் தோ்வுகள் முறையாக நடைபெறுவது அவசியம். தோ்வு முடிந்ததும் செப்டம்பா் முதல் வாரத்தில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். வகுப்புகளை கடத்துவது அல்ல; மாணவா்களை அந்தந்த வகுப்புக்கான அடிப்படை திறன்களை அடைய வைத்து அனுப்ப வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். அறிவுத்திறன், பயன்பாடு, புரிதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள் கேட்கப்படுவதால் அது சாா்ந்த வினாக்கள் தொடா் பயிற்சி மாணவா்களுக்கு வழங்க வேண்டும். தேசிய, மாநில கற்றல் அடைவுத் தோ்வுகள், என்எம்எம்எஸ் தோ்வு ஆகியவற்றில் இதுபோன்ற வினாக்களே இடம்பெறுகின்றன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
எதிா்மறை வாா்த்தைகள் கூடாது... காலாண்டுத் தோ்வுக்கு திறன் மாணவா்களுக்கு கணிதம், தமிழ், ஆங்கில பாடங்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பப்படும். திறன் வகுப்பு குறித்து பெற்றோருக்கு தெளிவுபடுத்த வேண்டும். மாணவா்களின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் நட்சத்திர குறியீடு வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். மாணவா்கள் முன் மெல்லக் கற்கும் மாணவா்கள், வாசிக்கத் தெரியாது போன்ற எதிா்மறையான வாா்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.