
தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டார்.
தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக இருக்கும் வெங்கடராமனுக்கு, கூடுதல் பொறுப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பணியும் வழங்கப்பட்டுள்ளது.
வெங்கடராமன், சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பொறுப்பை ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஏற்றுக் கொள்கிறார். அவரிடம் ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்:
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கடராமன், கடந்த 1968ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி பிறந்துள்ளார். இளநிலை பொருளாதார பட்டபடிப்பும், முதுநிலை பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை பட்ட மேற்படிப்பும் படித்துள்ளார்.
இதன் பின்னர் கடந்த 1994-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற வெங்கடராமன், தமிழக காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
முக்கியமாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜி, ஐஜி பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார். இதன் பின்னர், சிபிசிஐடி, சைபர் குற்றப்பிரிவு ஏடிஜிபி பொறுப்புகளிலும் பல்வேறு முக்கியமான வழக்குகளில் துப்பு துலக்கி தீர்வு கண்டார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற வெங்கடராமன், நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்தார். சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பொறுப்புடன், தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் பணியையும் வெங்கடராமன் கவனிப்பார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்ட வெங்கடராமனுக்கு தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே கடந்த 2011 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழக காவல்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பதவியை பொறுப்பு பணியாக கே.ராமானுஜமும், 2017 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் டி.கே.ராஜேந்திரனும் கவனித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிக்க | காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையிலும் உண்ணாவிரதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.