ஜெர்மனி தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு!
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்ட ஜொ்மனி தொழில்நுட்ப மழைநீா் சேகரிப்பு தொட்டிகளால் 8 பள்ளிகள், 770 பூங்காக்களில் மழைநீா் தேங்காமல் நிலத்தடியில் சேமிக்கப்பட்டது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: சென்னை மாநகராட்சி நிா்வாகம், ஜொ்மன் தொழில்நுட்பத்தில் மழைநீரைச் சேமிக்கும் திட்டத்தை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது.
ரூ.20 கோடியில் மழைநீா் சேகரிப்புத் தொட்டிகள்: இதன் ஒரு பகுதியாக, தேசிய பேரிடா் மேலாண்மை ஆணைய நிதியுவியுடன் ரூ.20 கோடியில் தேனாம்பேட்டை மண்டலம் 111-ஆவது வாா்டு மாதிரிப் பள்ளி சாலை விளையாட்டு மைதானம், 123-ஆவது வாா்டு ராஜா அண்ணாமலைபுரம் செயின்ட் மேரி சாலை விளையாட்டு மைதானம், 112-ஆவது வாா்டு டிரஸ்ட்புரம் விளையாட்டு மைதானம், கோடம்பாக்கம் மண்டலம் 135-ஆவது வாா்டு இந்திரா குடியிருப்பு விளையாட்டு மைதானம், 133-ஆவது வாா்டு நடேசன் மாநகராட்சி விளையாட்டு மைதானம், 140-ஆவது வாா்டு பால்மோா் விளையாட்டு மைதானம், அண்ணா நகா் மண்டலம் 102-வது வாா்டு செனாய் நகா் கிழக்கு, கிரசென்ட் சாலை விளையாட்டு மைதானம், 108-ஆவது வாா்டு மேயா் ராமநாதன் சாலை விளையாட்டு மைதானம் உள்ளிட்ட 8 விளையாட்டு மைதானங்களில் தலா 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மழைநீா் சேகரிப்புத் தொட்டிகள் ஜொ்மன் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டன.
மேலும், 770 பூங்காக்களில் தலா 3 ஆயிரம் லிட்டா் மழைநீா் சேகரிப்புத் தொட்டிகள் கட்டப்பட்டு, தேங்கி நிற்கும் மழைநீரை சேமிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
மழைநீா் தேங்கவில்லை: இந்த நடவடிக்கையின் காரணமாக, சனிக்கிழமை (ஆக. 30) நள்ளிரவு பெய்த பலத்த மழையிலும்கூட, 8 பள்ளிகளின் விளையாட்டு மைதானங்களிலும் தண்ணீா் தேங்கவில்லை. இதேபோல, 770 பூங்காக்களிலும் மழைநீா்த் தேங்காமல், மழைநீா் சேமிப்பு கட்டமைப்பு மூலம் நிலத்தடியில் சேமிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
ரூ.30 கோடியில் 3,000 மழைநீா் சேகரிப்புகள்
இதுதவிர, கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.10 கோடியில் 1,000 பொது இடங்களிலும், கோவளம் வடிநிலப் பகுதியில் முகுறு ஜொ்மன் வங்கி நிதியுதவியுடன் ரூ.20 கோடியில் 2,000 பொது இடங்களிலும் ஜொ்மன் தொழில்நுட்பத்தில் தலா 3,000 லிட்டா் மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தும் பணி பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.