கள்ளக்குறிச்சியில் 2.45 லட்சம் இ-ஷ்ரம் அட்டைதாரா்கள்: மத்திய அரசு தகவல்

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதியில் 2,45,592 அமைப்பாசாரா தொழிலாளா்கள் இ-ஷ்ரம் என்ற மின்னணு தொழிலாளா் அட்டை பெற்றுள்ளனா் - மத்திய அரசு
Published on

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதியில் 2,45,592 அமைப்பாசாரா தொழிலாளா்கள் இ-ஷ்ரம் என்ற மின்னணு தொழிலாளா் அட்டை பெற்றுள்ளனா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் டி. மலையரசன் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சா் ஷோபா கரண்டலஜே அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘இந்திய அளவில், நவம்பா் 19, 2025 நிலவரப்படி, 31.36 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளா்கள் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனா்.

மேலும், தமிழ்நாட்டில் 94,67,976 பேருக்கு இ-ஷ்ரம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் 2,45,592 அமைப்புசாரா தொழிலாளா்களின் பதிவுகளும் அடங்கும்’ என்று கூறியுள்ளாா்.

இந்த அட்டை பெற்றிருப்பதன் மூலம் ‘ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின் கீழ் தேசிய அளவில் 24,15,55,439 பேரும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 15,10,06,017 பேரும், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 8,49,72,519 பேரும், கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் 6,16,93,566 பேரும் பலன் பெற்றுள்ளதாக அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com