

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகளின் விசாரணை நடவடிக்கைகளை ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அதிகாரியும் ஐபிஎஸ் அதிகாரியுமான சுமித்சரண் கரூருக்கு திங்கள்கிழமை வருகை தந்தார்.
கடந்த செப். 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற நடிகர் விஜய்யின் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே எஸ்ஐடி குழுவினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் திடீரென உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க முன் வந்தது. பின்னர் இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகளான சுமித்சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் கொண்ட குழுவினரின் கீழ் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் குமார் தலைமையில் சிபிஐ அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த விசாரணைக் குழுவினர் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி முதல் கரூர் பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் தங்கி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 25-ம்தேதி த .வெ .க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, இணைச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் மாசி பவுன்ராஜ் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது நெரிசல் சம்பவம் நடைபெற்ற போது விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவான பதிவுகளை வாங்கி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் விசாரணையின் முழு விவரங்களை அறிய சிபிஐ குழுவின் கண்காணிப்பு அதிகாரியும், ஐபிஎஸ் அதிகாரியுமான சுமித்சரண் கரூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வருகை தந்தார்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்த டி .என் .பி. எல் சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்த அவர் திங்கள்கிழமை காலை கரூரில் சிபிஐ அதிகாரிகள் தங்கி விசாரணை மேற்கொண்டு வரும் கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையின் கட்டடத்திற்கு காலை 10.40 மணியளவில் சுமித்சரண் வந்தார். பின்னர் சிபிஐ அதிகாரிகளிடம் இதுவரை விசாரணை மேற்கொண்டதன் தகவலை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து இதுவரை யார் யாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது, விசாரணையின் முன்னேற்றம் எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.