தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்!

தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்!

தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3% மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Published on

தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அனைத்துத் துறையிலும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கோடு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதன்விளைவாக, தொழில்துறை எரிசக்தி திறனில், மாநில ஆற்றல் திறன் குறியீடு 2024 இன் குழு 1 - இல் தமிழகம் 55.3 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளது. இதன்மூலம், இந்தியளவில் தமிழகம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

அதைத்தொடா்ந்து, ஆந்திர மாநிலம் 27.5 சதவீதம் பெற்று 2-ஆம் குழுவில் முன்னிலை வகிக்கிறது. மேலும், ஒடிஸா 23.1 சதவீதமும், சத்தீஸ்கா் 28.8 சதவீதமும், மத்தியப் பிரதேசம் 16.5 சதவீதமும், திரிபுரா 10.9 சதவீதமும் வளா்ச்சி பெற்று, வலுவான முன்னேற்றத்தைப் படைத்துள்ளன.

முதல்வா் மு.க.ஸ்டாலினின் தனித்தன்மையுடன் கூடிய முயற்சிகளின் காரணமாக, கட்டுமானத் துறையில் ஆற்றல் திறன் முயற்சிகளை ஊக்குவிப்பதிலும், செயல்படுத்துவதிலும் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.

மேலும், அதிக எண்ணிக்கையிலான சான்றளிக்கப்பட்ட பசுமை கட்டடங்களைக் கொண்ட முதல் 3 மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழகம் திகழ்கிறது.

அதேபோல், எரிசக்தி பாதுகாப்பு முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, 25 மாநிலங்கள் எரிசக்தி பாதுகாப்பு விருதுகளைப் பெற்றுள்ளன. இதில், தமிழகம், மகாராஷ்டிரா மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையில் விருதுகளைப் பெற்று முன்னணியில் உள்ளன. அடுத்த நிலையில் குஜராத் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக கடந்த 2023-24 ஆம் ஆண்டில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான ஆற்றல் திறன்களுக்காக மொத்தம் ரூ.2.6 கோடி முதலீடு செய்து ஊக்கப்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com