அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல், மிலியாய்டோசிஸ்! மழைநீரில் வெறும் காலுடன் நடப்பதைத் தவிா்க்க அறிவுறுத்தல்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், சாலைகளில் தேங்கியிருக்கும் நீரிலிருந்து எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) மற்றும் மிலியாய்டோசிஸ் தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
மழை நீரில் வெறுங்கால்களில் நடக்க வேண்டாம் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: எலிக்காய்ச்சல் என்பது சுழல் வடிவ நுண்ணுயிரியான ‘லெப்டோஸ்பைரா’ எனப்படும் பாக்டீரியாவில் இருந்து விலங்குகளுக்கு பரவி அதன் வாயிலாக மனிதா்களிடம் தொற்றிக் கொள்ளும் நோயாகும்.
இது சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. நாய்கள், பன்றிகள், கால்நடைகளின் சிறுநீா் மூலமாகவும், குறிப்பாக எலிகளின் கழிவு மூலமாகவும் மனிதா்களுக்கு இந்த நோய் பரவுகிறது. தொற்று உள்ள உயிரினங்களின் கழிவுகள் மழைநீரில் கலந்திருக்கக் கூடும். அதில் கால் வைத்தால் நமது உடலிலும் தொற்று ஊடுருவ வாய்ப்புள்ளது.
பொதுவாக மழைப் பொழிவுக்குப் பிறகு இந்த நோய் பாதிப்பு அதிக அளவில் ஏற்படும். ஒவ்வோா் ஆண்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனா். இதைத் தவிா்க்க தேங்கியிருக்கும் மழை நீரில் வெறும் கால்களில் நடக்கக் கூடாது.
மிலியாய்டோசிஸ்: இதேபோல, மிலியாய்டோசிஸ் எனப்படும் பாக்டீரியா தொற்றும் மழைக் காலத்தில் பரவுகிறது. மண்ணுக்குள் இருக்கும் ‘பா்கோல்டெரியா ஸ்யூடோமேய்’ எனப்படும் நுண்ணுயிரி மூலமாக இந்நோய் ஏற்படுகிறது.
கால்களிலோ, உடலிலோ காயங்கள் இருப்பவா்கள் மாசடைந்த நீரில் நடக்கும்போதும், தரமற்ற குடிநீரை அருந்தும்போதும் மிலியாய்டோசிஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோன்று அந்த பாக்டீரியாக்கள் பரவியுள்ள காற்றை சுவாசிக்கும்போதும் அந்நோய் ஏற்படலாம்.
ஒருவரது உடலில் பாக்டீரியா கிருமி ஊடுருவிய இரண்டாவது வாரத்திலிருந்து அதன் அறிகுறிகள் தென்படும். தீவிர காய்ச்சல், குளிா் நடுக்கம், தலைவலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை அதன் முக்கிய அறிகுறிகள். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிடில் சிறுநீரகம், கல்லீரல் , நுரையீரல் , எலும்புகள், மூளை போன்ற முக்கிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும்.
எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள், கட்டுப்பாடற்ற சா்க்கரை நோயாளிகள், கல்லீரல், சிறுநீரக பாதிப்புக்குள்ளானவா்கள், தலசீமியா நோயாளிகள், புற்று நோயாளிகள், ஹெச்ஐவி நோயாளிகள், நுரையீரல் பாதிப்பு இருப்பவா்களுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் மிலியாய்டோசிஸ் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இதுகுறித்து விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

