முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்கோப்புப்படம்

‘வில் பவர்’தான் அரசியலுக்கு அவசியம்! - முதல்வர் ஸ்டாலின்

உலக மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் முதல்வர் பேச்சு.
Published on

‘வில் பவர்’தான் அரசியலுக்கு அவசியம்! மனிதர்களுக்கு அவசியம்! அதை நீங்கள் எல்லோரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் தெரிவித்திருப்பதாவது:

”இங்கே வந்திருக்கக்கூடிய, அதேபோல இந்த நிகழ்வை தொலைக்காட்சியின் மூலமாக நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை மாற்றுத் திறனாளி சகோதர - சகோதரிகளுக்கும் முதலில் என்னுடைய இதயபூர்வமான “மாற்றுத்திறனாளிகள் நாள்” வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அரசு போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க, ஆண்டுதோறும் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியோடு கூடிய சிறப்புபயிற்சி வகுப்புகள், முதற்கட்டமாக - சென்னையில் குரூப்–2, 2A தேர்வு எழுத உள்ளவர்களில் பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்த, 49 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது.

அரசு மற்றும் பொதுக்கட்டடங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில், தடையற்ற சூழல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சாய்வுதளப் பாதை, மின்தூக்கி அமைத்தல், கழிவறை அமைத்தல், பார்வைத்திறன் குறையுடையோர் எளிதில் செல்வதற்காக ‘டேக்டைல்’ தரைப்பகுதி, பிரெய்லி எழுத்துகள் கொண்ட தகவல் பலகை பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பல்வேறு அரசு துறைகளின் கட்டடங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

ஒருவரும் விடுபடுதல் கூடாது என்ற நோக்கில் மாற்றுத்திறனாளிகள் இருப்பிடத்திற்கே சென்று, அவர்களின் மறுவாழ்வு சிகிக்சைக்கான பயிற்சி; மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில், உபகரணங்களை தெரிவு செய்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி, 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இப்போது தன்னிறைவு நிலையை அடையும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படி எத்தனையோ திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தக்கூடிய அரசு தான் உங்களுடைய திராவிட மாடல் அரசு என்பதை நான் பெருமையோடு குறிப்பிடுகிறேன்.

இந்த வரிசையில்தான் மாற்றுத் திறனாளிகளின் அரசியல், சமூக உரிமையை நிலைநாட்டும் வகையில் முக்கியமான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தோம். இங்கே பேசுகின்ற போது, எல்லோரும் சொன்னார்களே, உங்களுக்கான கோரிக்கையை நீங்களே ஒலிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாற்றுத் திறனாளி உறுப்பினர் இடம் பெறுவார் என்ற மாபெரும் சமூகநீதி உரிமையை வழங்கியிருக்கிறோம். அந்த அடிப்படையில், உங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கியிருக்கிறோம்!

ஊராட்சி அமைப்புகள் - ஒன்றிய அமைப்புகள் - மாவட்ட அமைப்புகளில் இன்றைக்கு நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பதன் மூலமாக, சமூகத்தில் மக்களாட்சிக்கான உண்மையான பொருளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்! இனிமேல், நீங்கள், அரசு கொண்டு வரும் திட்டங்களின் பயனாளிகள் மட்டுமல்ல, அரசின் திட்டங்களில் உங்கள் குரலை பதிவுசெய்யப்போகும் மக்கள் பிரதிநிதிகள்! மனுக்களை அளிக்க போகிறவர்கள் இல்லை நீங்கள்; மனுக்களை பெற்று தீர்வுகாணப் போகின்றவர்கள் நீங்கள்!

நம்மைப் பொறுத்தவரைக்கும், நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் - எழுதும் ஒவ்வொரு எழுத்தும் - செய்யும் ஒவ்வொரு செயலும் - மாற்றத்தை உண்டாக்க வேண்டும்! மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்க வேண்டும்! அதனால்தான் திருநர்கள் - மாற்றுத் திறனாளிகள் போன்ற சொற்களை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறோம்! இந்த சொற்களின் பயன்பாடு, சமூகத்திற்கு ஒரு உளவியல் மாற்றத்தை ஏற்படுத்தும்! ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

திட்டங்களை உருவாக்குவதும், உதவித்தொகைகள் வழங்குவதும் எவ்வளவு முக்கியமோ - அதே அளவுக்கு சமூகத்தின் மனமாற்றமும் முக்கியம்! அந்த மனமாற்றத்தை நோக்கி நடைபோட இனிமேல் நீங்கள் ஆற்றப் போகும் பணிகள் முக்கியமானதாக இருக்கும்! ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் குரலையும் - நீங்கள் எதிரொலிக்க வேண்டும்! அவர்களுக்கான தேவைகளை உள்ளாட்சி அமைப்புகளில் எடுத்துச் சொல்லி நிறைவேற்றித் தர வேண்டும்! இப்போதும் சில பிற்போக்குவாதிகள், “இவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள் ஆகி என்ன செய்யப் போகிறார்கள்” என்று நினைக்கலாம்! அவர்களின் தரம் அவ்வளவுதான்! அதைப்பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எந்த நொடியிலும் நீங்கள் தன்னம்பிக்கையை விட்டுவிடக் கூடாது! சோர்வடையக் கூடாது!

தலைவர் கலைஞரையே நீங்கள் ஒரு ரோல்மாடலாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்! தலைவர் கலைஞர் ஒரு முறை ஒரு விபத்தை எதிர்கொண்டார். அதனால், அவரது ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும், அந்த வலியைக்கூட பொறுத்துக்கொண்டு, இறுதிவரை சமூகத்திற்காக உழைத்தார். ஏராளமான இலக்கிய படைப்புகள் - உடன்பிறப்புகளுக்கு கடிதங்கள் - தமிழ்நாட்டு வரலாற்றை திருத்தி எழுதிய அறிக்கைகள் - திட்டங்களை - அவரால் கொடுக்க முடிந்தது. கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு அவர் மனதை பாதிக்கவில்லை. தலைவர் கலைஞர் முதுமைக் காலத்தில், சக்கர நாற்காலியில்தான் வலம் வந்தார். சக்கர நாற்காலியில் இருந்தபடியே, எப்படி பம்பரமாக சுழன்று, சுழன்று உழைத்தார் என்று உங்களுக்குத் தெரியும்! இந்த ‘வில் பவர்’தான் அரசியலுக்கு அவசியம்! மனிதர்களுக்கு அவசியம்! அதை நீங்கள் எல்லோரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்!

ஒட்டுமொத்த மாற்றுத் திறனாளிகளுக்கும் தன்னம்பிக்கையை எப்படி உருவாக்குவது என்று ஆலோசித்துதான் இப்படி ஒரு சட்டத்தையே நாம் உருவாக்கி இருக்கிறோம். மக்கள் பிரதிநிதிகளாக நீங்கள் ஆற்றப்போகும் பணிகளைப் பார்த்து, இதை மற்ற மாநிலங்களிலும் முன்னெடுக்க வேண்டும். இதுதான், உண்மையான சமத்துவத்தையும் - சமூகநீதியையும் நோக்கிய பயணமாக இருக்கும்! உங்கள் பணி சிறக்க – வெற்றி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

Summary

Chief Minister's speech at a function held to mark World Disability Day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com