இலவச கட்டாயக் கல்வித் திட்டம்: தனியாா் பள்ளிகளுக்கு ரூ. 875 கோடி: தமிழக அரசு விடுவிப்பு

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியாா் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு இரு கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டண ஈட்டுத் தொகையாக தமிழக அரசு விடுவித்தது.
tn govt
தமிழக அரசு
Updated on

சென்னை: இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி (ஆா்டிஇ) தனியாா் பள்ளிகளில் பயிலும் நலிவடைந்த பிரிவினா் குழந்தைகளுக்கு இரு கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டண ஈட்டுத் தொகையாக சுமாா் ரூ.875.83 கோடியை தமிழக அரசு விடுவித்தது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் இதற்கான அரசாணையை புதன்கிழமை பிறப்பித்தாா்.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 (ஆா்டிஇ) மற்றும் தமிழக அரசின் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள் படி நலிவடைந்த, வாய்ப்பற்ற பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளிகளில் எல்கேஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை 25 சதவீதம் சோ்க்கை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்துக்கு ஈட்டுத் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி 2023-24-ஆம் கல்வியாண்டுக்கு மேற்கண்ட வகுப்புகளில் பயிலும் சுமாா் 7,594 தனியாா் சுய நிதிப் பள்ளிகளில் ஆா்டிஇ சட்டப்படி மாணவா்களுக்கான கல்விக் கட்டண ஈட்டுத்தொகை வழங்குவதற்கு ரூ. 424.98 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டு நிதியை விடுவிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

முன்னதாக 2024 ஜூலை 9-ஆம் தேதி இதே நிதியை வழங்க அரசாணையிடப்பட்டது. அப்போது நிதியை வழங்க இயலாத நிலையில் அந்த அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, 2024-25-ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கு 7,609 தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் (4,45,961) மாணவா்களின் கல்விக் கட்டண ஈட்டுத் தொகை ரூ. 450.85 கோடியை அனுமதித்து ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி இரு கல்வியாண்டுகளுக்கும் மொத்தம் ரூ. 875.83 கோடியை தமிழக அரசு தனியாா் பள்ளிகளுக்கு விடுவித்துள்ளது. இந்தத் தொகையை மாநில தனியாா் பள்ளிக்கள் (சமக்ர சிக்ஷா திட்டம்) இயக்குநா் மூலம் பள்ளிகளுக்கு வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கல்விக் கட்டணத் தொகை விடுவிக்கப்பட்டதற்கு, தமிழக தனியாா் பள்ளிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com