தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டுச் சர்க்கரைக்கு புவிசார் குறியீடு! - தமிழக அரசு தகவல்

தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டுச் சர்க்கரைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது பற்றி...
GI for Thooyamalli Rice and Kavundapadi Sugar
அரிசி (கோப்புப்படம்)
Updated on
2 min read

தமிழ்நாட்டு பாரம்பரியமிக்க தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டுச் சர்க்கரைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக வேளாண் துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டிற்கே உரித்தான தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டுச் சர்க்கரை வேளாண் விளைபொருட்களுக்கு தனித்துவ புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு (Geographical Indication) என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்திலிருந்து உருவாகும் ஒரு பொருளில் பயன்படுத்தப்படும் ஒரு அடையாளமாகும். அப்பொருள்கள் அவற்றின் உருவாகும் இடத்தின் சிறப்பு குணங்களைக் கொண்டதாக இருக்கும். உலகின்‌ வெவ்வேறு பகுதிகளில்‌ பல்வேறு வேளாண் பொருள்கள்‌ உற்பத்தி செய்யப்பட்டாலும்‌, குறிப்பிட்ட இடத்தில்‌ / பகுதியில்‌ உற்பத்தி செய்யப்படும்‌, பொருட்கள்‌ அவை உருவாகும் இடத்தின் காரணமாக அவற்றின் சுவை, தரம்‌ போன்ற சிறப்பு குணங்களைக் கொண்டு இயற்கையில்‌ தனித்துவமானதாக விளங்குகின்றன.

இத்தகைய தனித்துவமான குணங்கள் காரணமாக அவை சர்வதேச மற்றும் தேசிய அளவில் பெரும் நற்பெயரைப் பெற்றுள்ளன. வேளாண் பொருள்கள், உணவு பொருள்கள், கைவினைப் பொருள்கள், பிற தயாரிப்பு பொருள்கள், இயற்கை பொருள்கள்என பல்வேறு வகைகளுக்கு புவிசார் குறியீடு (GI) வழங்கப்படுகிறது.

வேளாண் உற்பத்தியினை உயர்த்துவதோடு, வேளாண் பொருட்களின் மதிப்பினை உயர்த்தி, உரிய சந்தைகளுக்கு எடுத்துச்சென்று உழவர்கள் கூடுதல் விலைபெற்று அவர்களின் நலன் காக்கப்படவேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் தனித்துவம் கொண்ட வேளாண் பொருள்களைக் கண்டறிந்து அவற்றிற்கு புவிசார் குறியீடு பெறும் பொருட்டு, 2021-22 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டு, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் புவிசார் குறியீடு (GI) பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல், இராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம், சேலம் 2 கண்ணாடி கத்திரி, தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டுச்சர்க்கரை, அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, பேராவூரணி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, வீரமாங்குடி அச்சுவெல்லம், விளாத்திகுளம் மிளகாய், கோட்டிமுளை கத்திரி, மதுரை செங்கரும்பு, கருப்பு கவுனி அரிசி, ஆண்டார்குளம் கத்திரி, விருதுநகர் அதலைக்காய், திண்டிவனம் பனிப்பயறு, சேங்கல் துவரை, ஜவ்வாதுமலை சாமை, சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லி மலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, அய்யம்பாளையம் நெட்டை தென்னை, செஞ்சோளம், புவனகிரி மிதி பாகற்காய், உரிகம்புளி, திருநெல்வேலி அவுரி இலை, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் (கண்வலி) விதை, நல்லூர் வரகு, வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, ஆயக்குடி கொய்யா, கப்பல்பட்டி கரும்பு முருங்கை மற்றும் பொள்ளாச்சி ஜாதிக்காய் ஆகிய 41 வேளாண் பொருள்களுக்கு புவிசார் குறியீடு (GI) பெற தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.

இதுவரை, சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருதுநகர் சம்பாவத்தல், இராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம், தூயமல்லி, மற்றும் கவுந்தம்பாடி நாட்டு சர்க்கரை ஆகிய 9 வேளாண் பொருள்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு இவ்வரசால் பெறப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு பெறப்பட்ட வேளாண் பொருட்களை‌ சந்தைப்படுத்துதல்‌ எளிதாக்கப்படுவதுடன்‌ அவற்றின்‌ தேவை மற்றும்‌ ஏற்றுமதி அளவும் அதிகரித்து, வேளாண் வணிகம் விரிவுபடுத்தப்படுவதுடன், பொருளாதார வளர்ச்சியில் மேம்பாடு அடையவும் வழிவகுக்கும்.

Summary

GI for Thooyamalli Rice and Kavundapadi Sugar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com