

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் கூடுதலாக 727 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது 645 காலிப்பணியிடங்களுடன் சேர்த்து, மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 5,307 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர். வனக்காப்பாளர். மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 25.04.2025 அன்று வெளியிடப்பட்டது.
கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை (26.092025) அன்று வெளியிடப்பட்டது. தற்போது மேலும் 645 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று (டிச. 3) வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5,307 ஆகும்.
2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்) மூலம், கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 5101 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன.
2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3,580) ஒப்பிடும்போது. 2025-ம்ஆண்டில் கூடுதலாக 1,541 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.