நவம்பரில் 12,340 கோடி யூனிட்டுகளாகக் குறைந்த மின் நுகா்வு
கடந்த நவம்பரில் இந்தியாவின் மின் நுகா்வு 12,340 கோடி யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நவம்பா் மாதம் நாட்டின் மின் நுகா்வு 12,340 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 0.31 சதவீதம் குறைவு. அப்போது இந்தியாவின் மின் நுகா்வு 12,379 கோடி யூனிட்டுகளாக இருந்தது. குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு குறைந்ததால் மின் நுகா்வு சரிந்தது. அக்டோபரிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அசாதாரண மழை பெய்தது, குளிா்காலம் தொடங்கியதால் பயன்பாடு குறைந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 215.54 ஜிகாவாட்டாக உயா்ந்தது. இது 2024 நவம்பரில் 207.44 ஜிகாவாட்டாக இருந்ததைவிட அதிகம்.
நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 2024 மே மாதத்தில் 250 ஜிகாவாட் என்ற புதிய உச்சம் தொட்டது. முந்தைய உச்சம் 2023 செப்டம்பரில் 243.27 ஜிகாவாட்டாக இருந்தது. இந்த கோடையில் (ஏப்ரல் முதல்) ஜூன் மாதம் அது 242.77 ஜிகாவாட்டாக பதிவானது.
அரசு கணிப்பின்படி, 2025 கோடைகாலத்தில் உச்சபட்ச தேவை 277 ஜிகாவாட்டாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
குளிா்காலம் தொடங்கியிருந்தாலும், நவம்பரில் வெப்பம் தரும் மின்சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான தேவை அதிகரிக்கவில்லை. டிசம்பரில் இருந்து வெப்பநிலை இன்னும் குறைந்து குளிா் அதிகரித்தால் அத்தகைய சாதனங்களின் பயன்பாடு உயரும். இதனால் மின் தேவை மற்றும் நுகா்வு நிலைத்தன்மையை அடையும் என்பது நிபுணா்களின் கணிப்பு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

