திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம்  தீப விவகாரம்! தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
Updated on
1 min read

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் ஏற்ற உத்தரவிடக் கோரி மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வழக்கமான இடங்களுடன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணிலும் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

இதற்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வரவில்லை. இதன் காரணமாக, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் புதன்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே, மாலை 4 மணியளவில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீபம் ஏற்றும் பொருள்கள் அனைத்தும் கீழே இறக்கப்பட்டன. மாலை 6.5 மணியளவில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதையடுத்து, இந்து அமைப்பினர் மலைப் பாதை அருகே திரண்டு, போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு, மலை மீது ஏற முயன்றனர். அப்போது, அவர்களுக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே, பொதுமக்களின் பாதுகாப்பு, பொது அமைதியை கருத்தில்கொண்டு, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன், தனி நீதிபதியின் உத்தரவில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்றும், அரசு ஏதோவொரு நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Summary

Thiruparankundram Deepam issue: Tamil Nadu government's appeal dismissed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com