

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உரிமையுண்டு என்று அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அமைச்சர் ரகுபதி மற்றும் முன்னாள் எம்.பி. ஆர்.எஸ். பாரதி விளக்கமளித்து பேசுகையில், ``கார்த்திகைத் திருநாள் தமிழர்களுக்கான பண்டிகை; உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடுவர். இதில் இந்துத்துவத்துக்கு எந்த வேலையும் கிடையாது.
தற்போது திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவது குறித்து பிரச்னையைக் கிளப்பி, நீதிமன்றத்தில் ஓர் உத்தரவையும் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், எந்த இடத்தில் தீபம் ஏற்றுகிறோமோ, அதே இடத்தில்தான் தீபமேற்ற வேண்டும் என்று 2024-லிலேயே நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
அதனை அறியாதவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிபதியும் தீர்ப்பு வழங்கியுள்ளார். நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். முதல்வர் ஸ்டாலினை போல சட்டத்தை மதிப்பவர்கள், இந்தியாவிலேயே கிடையாது. சட்டத்தின் ஆட்சியே தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்று விரும்புகிறவர் முதல்வர்.
2014-லிலேயே இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு இல்லாமல், தனி நீதிபதியை வைத்து தீர்ப்பை வாங்கிக் கொண்டு, அனுமதி கோரினால் - எப்படி அனுமதியளிக்க முடியும்? அப்படி அனுமதியளித்தால், தமிழக அரசின் மீது என்ன குற்றச்சாட்டு வரும் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகையால், 2014 தீர்ப்பை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
நீதிமன்றத் தீர்ப்பை மறந்துவிட்டுப் பேசுகிறவர்கள் அவர்கள்தான். 2014 தீர்ப்பின் அடிப்படையில், அவர்கள் மீது எந்த வழக்கையும் தொடுப்பதற்கு தமிழக அரசுக்கு உரிமையுண்டு. 2014 தீர்ப்பையே நீதிமன்றத்தில் மறைத்தால், அதனை மக்கள் நம்புவார்களா? தமிழ்நாட்டு மக்கள் இளிச்சவாயர்கள் அல்ல; ஏமாளிகள் அல்ல.
மத ஒற்றுமை, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான ஒரே பூமி, இந்தியாவிலேயே தமிழ்நாடுதான். தமிழ்நாடு அரசின் மீது ஏதேனும் குற்றச்சாட்டை வைப்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் பணி. 2014-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கப்படி ஏற்றப்படும் இடத்தில்தான் தீபமேற்றப்பட வேண்டும் என்று அன்றைய அதிமுக வாதாடியது. அன்றைக்கு போராடியவர்கள்தான் இன்று வேண்டாம் என்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: 144 தடை உத்தரவு ரத்து; திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.