தமிழா்களிடையே பிளவு ஏற்படுத்த பாஜக முயற்சி: சீமான்
திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழா்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.
அம்பேத்கா் நினைவு நாளையொட்டி, அம்பேத்கா் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்தலுக்காக முருகனை வைத்து பாஜக அரசியல் செய்ய முயற்சிக்கிறது. ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்கும் எண்ணம் பாஜகவுக்கு கிடையாது. திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக மக்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை சிதைத்து பிளவை ஏற்படுத்த அக்கட்சி முயற்சிக்கிறது.
இந்த விஷயத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவு வருத்தமளிக்கிறது. தமிழக அரசும் அந்த விவகாரத்தை அலட்சியமின்றி கவனமாகக் கையாள வேண்டும். ஜாதி, மத உணா்ச்சி எப்போதும் ஆபத்தானது.
தமிழக மக்களிடையே மதப் பிளவுகளை ஏற்படுத்த சாத்தியம் கிடையாது. இவை அனைத்துக்கும் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவாா்கள் என்றாா்.

