மதக்கலவரம் நடக்க விடாமல் சக்கர வியூகத்தை உருவாக்கியவர் முதல்வர் : சேகர் பாபு

மதக்கலவரம் நடக்க விடாமல் தடுக்க சக்கர வியூகத்தை உருவாக்கியவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
பி.கே.சேகா்பாபு
அமைச்சர் சேகர் பாபு(கோப்புப்படம்)
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் மதக்கலவரம் நடக்க விடாமல் தடுக்க சக்கர வியூகத்தை உருவாக்கியவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மேலும், 1920, 1930, 1996, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும், 100 ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கேற்றப்படும் வழக்கமான இடத்திலேயே இந்நிகழ்வு நடக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

பக்தியை வைத்து பகை வளர்க்கக் கூடாது, சமாதானம் என்பதுதான் இறைக்கொள்கை சநாதானம் என்பதல்ல இறைக்கொள்கை!

மதக்கலவரம் நடக்க விடாமல் தடுக்க சக்கர வியூகத்தை உருவாக்கியவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று (06-12-2025) சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிந்தையில் உதித்த பக்தர் நலன் பயக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான 'ராமநாத சுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் - காசி பயணம்' வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (06-12-2025) காலை, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக காசிக்கு 602 பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். நாளை இரவு காசி சென்றடையும் இப்பயணிகள் டிசம்பர் 12 அன்று காலை திரும்பி வருவார்கள்.

இப்பயணத்திற்கு பயணி ஒருவருக்கு ஆகும் செலவு ரூ.27,500 ஆகும். இத்திட்டத்திற்கு மட்டும் தமிழ்நாடு அரசு இதுவரை 3 கோடியே 80 லட்சம் ரூபாயை மானியமாக வழங்கியுள்ளது.

"ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல, மூத்தோரின் மகிழ்ச்சியிலும் இறைவனைக் காணும் அரசாக நாங்கள் செயல்படுகிறோம்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் முக்திநாத் யாத்திரைக்கான மானியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது, 645 பக்தர்கள் பயன்பெற்ற இத்திட்டத்திற்கு 1 கோடியே 19 லட்சம் ரூபாய் மானியம், மானசரோவர் பயண உதவித் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டு கூடுதலாக 1 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது; ஆன்மீகப் பயணங்களின் ஒட்டுமொத்தமாக 11,998 பேர் பயனடைந்துள்ளனர், இதற்காக அரசு ஒதுக்கிய நிதி 11 கோடியே 13 இலட்சம் ரூபாயாகும்.

மொத்தமுள்ள 2064 கோயில் குளங்களில் 450 குளங்கள் ரூ.120 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன. 4 புதிய குளங்கள் வெட்டப்பட்டு பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. 700 திருக்கோயில் தேர்களுக்கு பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற ஜனவரி மாத இறுதிக்குள் 4,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்ததாவது, தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்கிறது, சட்டப்பூர்வமாகவே செயல்படுகிறது. இன, மத மோதல்களைத் தடுப்பதே தமிழ்நாடு அரசின் குறிக்கோள். 1920, 1930, 1996, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும், 100 ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கேற்றப்படும் வழக்கமான இடத்திலேயே இந்நிகழ்வு நடக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

பக்தியை வைத்து பகை வளர்க்க கூடாது, சமாதானம் என்பதுதான் இறைக்கொள்கை சநாதனம் என்பதல்ல இறைக்கொள்கை. வடக்கில் இதுபோன்ற விரும்பத்தகாத சூழல்களை ஏற்படுத்தி அரசியல் மாற்றத்தை உருவாக்கியது போல் தமிழ்நாட்டில் உருவாக்கலாம் என்று நினைக்கின்றார்கள். இது ராமானுஜர் வாழ்ந்த மண், எல்லோருக்கும் எல்லாமுமான மண். அதோடு மட்டுமல்ல ஒரு காலத்தில் வல்லபாய் பட்டேலை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றுவார்கள் இன்றைக்கு இந்தியாவே உற்றுநோக்குகின்ற இரும்பு மனிதராக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார்; அவருடைய ஆட்சியில் பிரிவினை என்பது ஒருநாளும் எடுபடாது. பிரிவினை சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.

இது சட்டத்தின் ஆட்சி, சட்டத்திற்கு அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளன, இறுதிவரை இன,மத மோதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு என்ன முயற்சி வேண்டுமானாலும் இந்த அரசு எடுக்கும், தமிழக முதல்வர் சட்டப்படியான போராட்டத்தை நடத்தி மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவார்.

இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்குகின்ற சூழ்நிலையை உருவாக்க நினைத்தார்கள் அது நடக்கவில்லை. அதை நடக்க விடாமல் தடுக்க சக்கர வியூகத்தை உருவாக்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

கடந்த கார்த்திகை தீபத்திருநாளன்று திருவண்ணாமலை உள்ளிட்ட 66 கோயில்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்; மக்களைப் பிரிக்கும் சூழ்ச்சியாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்;

அதிமுகவில் இப்போது எடுக்கின்ற நிலைப்பாடுகள் அத்தனையும் தில்லியில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் என்ன சொல்லுகிறாரோ அதற்கேற்ற வகையிலேதான் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கொண்ட கொள்கைகளை அவர்கள் கொண்ட லட்சியங்களைக் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை 2014, 2017 ஆகிய இரண்டு காலகட்டங்களிலும் அதிமுக ஆட்சிதான் இருந்தது. அந்த ஆட்சியில் தீபத்தை இன்னொரு இடத்தில் ஏற்றுவதற்கு அனுமதி மறுத்து இவர்கள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்கள். ஆனால் இன்றைக்கு அதை மறந்துவிட்டு இரண்டாம் இடத்திலும் தீபம் ஏற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று அறிக்கை விடுவது போலித்தனமானது, அவர்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்களை பாரதிய ஜனதாவிடம் அடிமை சாசனம் எழுதி தந்துவிட்டார்கள் என அதிமுக குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Summary

Minister Shekhar Babu has said that Tamil Nadu Chief Minister M.K. Stalin is the one who created the wheel strategy to prevent religious riots.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com