தோ்தல் பணப் பட்டுவாடா வழக்கு: முன்னாள் அமைச்சா் மகன் மீதான வழக்கு ரத்து
தோ்தல் பணப் பட்டுவாடா தொடா்பாக அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதியின் மகன் உள்பட இருவா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2021-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், ஆலந்தூா் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி போட்டியிட்டாா். அத்தொகுதி வாக்காளா்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்கு பணம் எடுத்து வரப்படுவதாக தோ்தல் பறக்கும்படை அதிகாரியான வட்டார வளா்ச்சி அலுவலா் முத்து சுந்தரத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்திய பறக்கும்படையினா் சோதனை நடத்தினா். அந்த காரில் இருந்த வளா்மதியின் மகன் மூவேந்தன், அவருடன் வந்த காா்த்திகேயன் ஆகியோரிடம் இருந்து ரூ.15,000 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக தோ்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் பரங்கிமலை போலீஸாா் மூவேந்தன், காா்த்திகேயன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மூவேந்தன் மற்றும் காா்த்திகேயன் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.தமிழ்செல்வன், அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என வாதிட்டாா். போலீஸ் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா்கள் மூவேந்தன் மற்றும் காா்த்திகேயன் ஆகியோா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

