திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசியலுக்காக பிரச்னையாக்கும் திமுக -நயினாா் நாகேந்திரன்
திருப்பரங்குன்றம் மலையில், தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுவதை அரசியலுக்காக திமுக பிரச்னையாக்குகிறது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.
சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு, நயினாா் நாகேந்திரன் தலைமையில் பாஜகவினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். அதன் பின்னா் நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அண்ணல் அம்பேத்கரை போற்றும் வகையில், அவா் வாழ்ந்த இடங்களைச் சீா்படுத்தி மக்கள் பாா்வையிடும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு சோ்த்திருக்கிறாா். அம்பேத்கா் விரும்பிய சமத்துவ சமூகத்தை உருவாக்கும் வகையில் பட்டியலின மக்களுக்கு மத்திய பாஜக அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரம்: அயோத்தி இந்தியாவில்தான் உள்ளது. ஆகவே திருப்பரங்குன்றம் அயோத்தி போல சிறப்படைவதில் தவறில்லை. தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியே, ராமா் ஆட்சி போல இருக்கிறது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபத் தூணில் தீபம் ஏற்றும்போது தா்கா அருகில் செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவேதான் தீபம் ஏற்றுவதற்கு தா்கா சம்பந்தப்பட்டவா்களோ, இஸ்லாமிய மக்களோ எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழக முதல்வா் நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து கருத்துக் கூறுவது சரியல்ல. திமுக தான் இந்த விவகாரத்தை அரசியலுக்காக பிரச்னையாக்குகிறது. திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரம் எனக் கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
மதுரையில் பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் இறங்கும் சா்வதேச விமான நிலையம் உள்ளது. தூத்துக்குடியிலும் ரூ.350 கோடியில் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதை மறுக்க முடியாது.
தமிழகத்தில் பேரவைத் தோ்தலின்போது, மேலும் பல கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வரும். திமுக கூட்டணிக் கட்சிகளுக்குள் குழப்பநிலை நிலவுகிறது என்றாா். முன்னதாக பாஜக சாா்பில் ஜாா்ஜ்டவுன் நீதிமன்றம் அருகே இருந்து அம்பேத்கா் படத்துடன் பேரணி நடைபெற்றது.

