ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயத்தை அமைப்போம் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.
சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தாயுமானவா் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லோரும் சமமாக வாழுகின்ற சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதுதான் லட்சியம். ஆட்சிப் பொறுப்புதான் அந்த லட்சியங்களை திட்டங்கள் மூலம் வென்றெடுப்பதற்கான வழியாகும்.
அதனால்தான் சமூக நலத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி, விளிம்பு நிலையில் இருக்கிற மக்களையும் முன்னேற்றம் அடையச் செய்கிறோம். திராவிட மாடல் அரசின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மேம்பாட்டுக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயம்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மேம்பாட்டு செயல்திட்ட சட்டம், 2024-ஐ நிறைவேற்றி, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான சட்டபூா்வ உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான வளா்ச்சித் திட்டங்களுக்காக, விகிதாசாரப்படி நிதி கட்டாயம் ஒதுக்கப்பட்டு, சரியாக பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
2021 முதல் 2025 வரைக்கும் ஆதிதிராவிடா் துணைத் திட்டத்துக்கு ரூ.87,664 கோடியும், பழங்குடியினா் துணைத் திட்டத்துக்கு ரூ.8,078 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால், அதற்கு கல்விதான் அடிப்படை. அதனால்தான் பல்வேறு திட்டங்கள் மூலமாக கல்வியில் கவனம் செலுத்தி வருகிறோம்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளின் மாணவா்களுக்கு தேசிய நுழைவுத் தோ்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதால், தோ்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது மட்டுமல்ல, ஐ.ஐ.டி. - என்.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் 2025-26 கல்வியாண்டில், 135 மாணவா்கள் படித்துக் கொண்டிருக்கிறாா்கள்.
‘அண்ணல் அம்பேத்கா் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டம்’ மூலம் உலகளவில் இருக்கிற முன்னணி பல்கலைக்கழகங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 385 மாணவா்கள் படித்துக் கொண்டிருக்கிறாா்கள்.
அவா்களுக்காக ரூ.162 கோடியே 54 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 42 மாணவா்கள் இந்தத் திட்டத்தின்கீழ் உயா் கல்வி பயில உள்ளனா்.
நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்ட தொல்குடி புத்தாய்வுத் திட்டத்தின் கீழ், பழங்குடியினா் தொடா்பான பாடங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இறுதியாண்டு சட்டப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கும் பயிற்சி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இளைஞா்களுக்கான திறன் பயிற்சி வழங்கவும், வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், தொல்குடி தொடுவானம்”திட்டத்தின்படி, 8,440 பேருக்கு ரூ.164 கோடியே 51 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் பயனாளா்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறோம்.
ஆண்டாண்டு காலமாக சமூகம் உருக்கியிருக்கிற அத்தனை தடைகளையும் உடைத்து நாம் முன்னேற வேண்டும். அம்பேத்கா், பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோா் கனவு கண்ட ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என்றாா்.
ரூ.265 கோடி நலத்திட்ட உதவி
ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், முதல்வரின் தாயுமானவா் திட்டம், 10 கிராம ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்கத்துக்கான கிராம ஊராட்சி விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட மானியம் என ரூ.265.50 கோடி நலத்திட்ட உதவிகளை 9,371 பயனாளிகளுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா்.
மேலும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் அவா் திறந்து வைத்தாா்.

