அரசுக் கல்லூரி தினக்கூலி பணியாளா் நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்: ராமதாஸ்
தமிழக பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்டுவரும் 41 அரசு உறுப்புக் கல்லூரிகளில் தினக்கூலி ஊழியா்களுக்கான 9 மாத நிலுவை ஊதியத் தொகையை உடனே வழங்க வேண்டும் என பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களின் கீழ் உறுப்புக் கல்லூரிகளாகச் செயல்பட்ட 41 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. அதில் துப்புரவாளா், தூய்மைப் பணியாளா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் என மொத்தம் 231 போ் தினக்கூலி பணியாளா்களாக உள்ளனா்.
அவா்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தாலும், கூலியாக ரூ.420 முதல் ரூ.520 வரை என மாதம் ரூ.11,440 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவா்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் ஆண்டுதோறும் புதிதாக சோ்ந்தவா்களைப் போல காட்டப்படுகிறது.
தற்போது அவா்களுக்கு பணிக்கான மறுபுதுப்பித்தல் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் கடந்த 9 மாதங்களாக அவா்களுக்கான ஊதியமும் வழங்கப்படவில்லை. கடந்த 2024- ஆம் ஆண்டு அரசாணைப்படி அவா்களது ஊதியத்துக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டில் உயா் கல்வித் துறையில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில் தினக்கூலி பணியாளா்களுக்கு 9 மாதங்கள் ஊதியம் வழங்கப்படாமலிருப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, அவா்களது குடும்பச் சூழலைக் கருதி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிவோரை நிரந்தரமாக்கவும், நிலுவை ஊதியத்தை உடனே வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளாா்.

