

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது. முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக மட்டும், யாரும் முதலீடு செய்ய முன் வரமாட்டார்கள் என்று மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பேசினார்.
மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ்நாடு வளா்கிறது’ என்ற தலைப்பில் இன்று (டிச. 7) நடைபெற்றுவரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரூ. 36,660.35 கோடிக்கான 91 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து, முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே நலிவடைந்திருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து, அவசியம், அவசரம் என்பதை அறிந்து, புரிந்து, அதற்காக பல்வேறு ஆலோசனைகளை எல்லாம் நாங்கள் நடத்தினோம். அதன்பிறகு, வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிட்டு நான் பயணங்களை மேற்கொண்டேன். ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை எல்லாம் சந்தித்துப் பேசி, அவர்களைத் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைத்தோம்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான் என்ற நிலையை உருவாக்கினோம். அதனை உறுதிப்படுத்துகின்ற வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், ‘தமிழ்நாடு வளா்கிறது’ என்ற மாநாடுகளை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம். அதன்படி தூத்துக்குடி, ஓசூர், கோவை, நகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம்.
அதன் தொடர்ச்சியாகதான், இன்று மதுரையில் இந்த முதலீட்டாளர் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்! இந்த மாநாட்டில், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 56 ஆயிரத்து 766 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில், உங்கள் ஒவ்வொருவருடைய பங்கும் மிக அவசியம்! ‘மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி - மாவட்டங்கள் தோறும் பரவலான வளர்ச்சி’ என்று சொன்னதை எங்களுடைய செயல்கள் மூலமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்!
ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 11 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறோம்.
34 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம். இதற்காக ஒப்பந்தங்களிட்டதோடு நம்முடைய வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கின்றவன் இல்லை நான்! அனைத்துத் துறைகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்வதை வழக்கமாக நான் வைத்திருக்கிறேன்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில், 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு ‘அவுட்புட்’ காண்பித்தது இல்லை.
முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது. முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக மட்டும், யாரும் முதலீடு செய்ய முன் வரமாட்டார்கள். முதலீடுகள் செய்வதற்கு முன்பு, அந்த மாநிலத்தின் கொள்கைகள் என்ன? மனிதவள திறன், உட்கட்டமைப்புகள், சட்டம் ஒழுங்கு, நிர்வாகத் திறன் மற்றும் நீண்டகால நிலைத்தன்மை போன்ற அனைத்தையும் நுணுக்கமாக ஆய்வு செய்து, தங்கள் வணிக நோக்கங்களுக்கு மிகவும் பொருத்தமான இடத்தைத்தான் முதலீட்டாளர்களான நீங்கள் தேர்வு செய்வீர்கள். அப்படி தேர்வு செய்யும்போது. தமிழ்நாடுதான் உங்கள் மனதுக்குள் இருக்கின்றது என்று அதை நான் கேட்கின்ற அளவிற்கு முதல் பெயராக நம்முடைய தமிழ்நாடு தான் இருக்கிறது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கின்ற இந்த அசைக்க முடியாத நம்பிக்கைக்கு முதலில் நான் நன்றி சொல்கிறேன்!
மதுரைக்கு மற்றொரு பெயர் இருக்கிறது... அது என்ன என்று தெரியுமா? தூங்கா நகரம். ஆனால், அதை அப்படிச் சொல்வதைவிட எப்போதும் விழிப்புடன் இருக்கக்கூடிய நகரம் என்றுதான் சொல்ல வேண்டும். வைகை நதி பாயும் மண்; மீனாட்சியம்மன் கோயிலின் கலை அழகுக்கு நிகரானது எதுவுமில்லை; இங்கே, மல்லிகை மணக்கும்; நள்ளிரவிலும் இட்லியில் ஆவி பறக்கும்! சுங்குடி சேலைகள், கைவினைப் பொருள்கள் எல்லோரையும் ஈர்க்கும். மதுரையை ஒட்டி வைகை ஆற்றங்கரையில் அமைந்த கீழடியில், தமிழர்களின் நாகரிகம் எந்தளவுக்கு தொன்மையானது என்று உலகத்துக்கு எடுத்துக்காட்டக்கூடிய வகையில் சான்றுகள் எல்லாம் நமக்கு கிடைத்திருக்கிறது.
இந்தியாவின் வரலாற்றையே அந்தச் சான்றுகள் மாற்றி எழுத வைத்திருக்கிறது. நம்முடைய அறிவார்ந்த, மதச்சார்பற்ற வாழ்க்கை முறையையும் உலகுக்கு மீண்டும் நினைவூட்டி இருக்கிறது. அதனால்தான் இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி எழுதவேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்.
மதுரை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம், கோயில் நகரம் என்று பெயர் மட்டும் வைத்துக் கொண்டால் போதுமா? எனக்கு இந்த மதுரை தொழில் நகரமாகவும் புகழ் பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, இலட்சியம்!"என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.