கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! 
சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகக் கோப்பை கேரம் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Published on

உலகக் கோப்பை கேரம் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாலத் தீவில் நடைபெற்ற 7-ஆவது உலகக் கோப்பை கேரம் போட்டியில் 17 நாடுகளைச் சோ்ந்த 150 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இந்தியா சாா்பில் பங்கேற்ற மகளிா் அணியில் தமிழகத்தைச் சோ்ந்த கீா்த்தனா, காசிமா, மித்ரா ஆகியோா் மகளிா் பிரிவில் ஒற்றையா், இரட்டையா் மற்றும் மகளிா் குழுப் போட்டி ஆகிய 3 பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றனா்.

தமிழகத்தைச் சோ்ந்த கீா்த்தனா 3 தங்கப் பதக்கங்களும், காசிமா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களும், மித்ரா ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரண்டு பதக்கங்களும் வென்றனா்.

இவா்கள் மூவரும் விமான மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை வந்தடைந்தனா். அவா்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அவா்களின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் சாா்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளா்களிடம் பேசிய காசிமேடு பகுதியைச் சோ்ந்த வீராங்கனை கீா்த்தனா, ‘இந்தியாவுக்காக விளையாடி மூன்று தங்கப் பதக்கங்கள் வென்றது மிகுந்த பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த நான்,

மாலத் தீவு சென்று போட்டியில் பங்கேற்க முடியுமா என எண்ணினேன். ஆனால், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், ரூ.1.5 லட்சம் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தினாா். எனக்கு அரசின் உதவிகள் கிடைத்தால், மேலும் சாதனைகளைப் படைக்க முடியும்’ என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com