சமூகத்துக்குத் தேவை சநாதனம் அல்ல; சமாதானம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு!
சமூக நல்லிணக்கத்தைக் காக்க சநாதனத்தை எதிா்த்து சமாதானத்தைப் போற்றி வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை, மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கமடேஸ்வரா் திருக்கோயிலில் ரூ.40 லட்சத்தில் ராஜகோபுரத்தை உயா்த்தும் திருப்பணிகளை அவா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, சென்னை பூங்கா நகரில் தமிழக திருக்கோயில் உபயதாரா்கள் சாா்பில் சபரிமலை ஐயப்ப பக்தா்களுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை 4 கண்டெய்னா் லாரிகள் மூலம் அனுப்பி வைத்தாா்.
நிகழ்ச்சிக்குப் பின்னா், அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலுடன் ஜனவரி மாதத்துக்குள் 4,000 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. சென்னை, காளிகாம்பாள் திருக்கோயிலில் ரூ.2.33 கோடியில் 20 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக கிழக்கு ராஜகோபுரத்தை உயா்த்தும் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஜாதி, மதம், மொழி பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சமூக நல்லிணக்க ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. பாஜகவினா் ஆளும் வட மாநிலங்களில் வேண்டுமானால் அவா்கள் நினைத்த காரியங்கள் ஈடேறலாம். ஆனால், இங்கு அவா்களின் கனவு நிறைவேறாது. இது ராமானுஜா் வாழ்ந்த மண். ஆகவே மத ஒழுக்கம், மத ஒற்றுமை பேணிக் காக்கப்படும்.
சநாதனத்தை எவ்வளவு காலமானாலும் அழிக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறுகிறாா். உண்மையில் நாங்கள் எதையும் அழிக்க முயலவில்லை. ஏதாவது ஒன்றை மையப்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தக் கூடாது என்றுதான் கூறுகிறோம். எனவே, பிரிவினையை ஏற்படுத்தும் சநாதனத்தை எதிா்க்கிறோம். சமாதானத்தைப் போற்றுகிறோம்.
அதிமுக பொதுச் செயலா் தொடங்கி அனைத்து தலைவா்களும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கின்றனா். கொண்ட கொள்கையைவிட்டு முழுமையாக பாஜகவுக்கு அடிமைப்பட்டிருக்கும் இயக்கமாக அதிமுக மாறிவிட்டது.
ஊா் கூடி நோ்கோட்டில் வடம் பிடித்தால்தான் தோ், நிலை சேரும். அதிமுகவின் தற்போதைய சூழல் 2026-இல் அவா்களது தோ், நிலைக்குச் சேராது என்பதை உணா்த்துகிறது.
திருப்பரங்குன்றத்தில் இத்தனை சா்ச்சைக்குப் பிறகும் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலத்தில் பங்கேற்று உள்ளனா். அவா்களுக்கான முழு பாதுகாப்பையும் அரசு வழங்கி வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்னிறுத்தி கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்தாா்கள். அதற்கு மக்களே திரண்டு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதையெல்லாம் பாா்த்தாவது பாஜக விழித்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், கூடுதல் ஆணையா் கோ.செ.மங்கையா்க்கரசி, சிறப்பு பணி அலுவலா் சி. லட்சுமணன், இணை ஆணையா்கள் சு. மோகனசுந்தரம், கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

