

பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் இன்று காலை குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர். குடமுழுக்கு பூஜைகள், கடந்த வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்று கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக விளங்குவது பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில். இந்தக் கோயிலில் ராஜகோபுரம் புதுப்பித்தல், உபசந்நிதிகள் விமானம் புதுப்பித்தல், வண்ணம் பூசுதல், வெள்ளிக்கதவு புதுப்பித்தல், விமானங்களுக்கு தங்கத் தகடு ஒட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை 6 மணிக்கு குடமுழுக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.
யாகை சாலை பூஜைகள்
வெள்ளிக்கிழமை முதல்கால யாக பூஜை தொடங்கி, சனிக்கிழமை இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை நான்காம் காலம், ஐந்தாம் காலம், திங்கள்கிழமை அதிகாலை 6-ஆம் கால யாக பூஜைகள் நடைபெற்று, நன்மங்கல இசையுடன், தேவாரம், திருவாசனம், கந்தபுராணம் ஓதுவார்களால் இசைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான சிவாச்சாரியர்களால் மந்திரங்கள் ஓதப்பட்டு, வெகு விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.