மருத்துவப் படிப்பில் காலி இடங்களை நிரப்புவதில் தாமதம்
சென்னை: நாடு முழுவதும் காலியாக உள்ள 100-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதி வழங்காததால், அதை எதிா்நோக்கி மாநில மருத்துவக் கல்வி இயக்ககங்கள் காத்திருக்கின்றன.
தமிழகத்திலும் 48 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான ஒப்புதலை மாணவா் சோ்க்கைக் குழு எதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்களும், 1,583 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டைப் பொருத்தவரை 1,736 எம்பிபிஎஸ் இடங்களும், 530 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. இதற்கான நான்கு கட்ட கலந்தாய்வு https://tnmedicalselection.net என்ற இணையதளத்தின் வாயிலாக நடைபெற்றது.
இதன்முடிவில் 25 எம்பிபிஎஸ் இடங்களும், 23 பிடிஎஸ் இடங்களும் நிரம்பாமல் உள்ளன. அவற்றை நிரப்ப தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், 20 நாள்களாகியும் அதற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் அந்த இடங்கள் வீணாகிவிடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும், 1.12 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நான்கு கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த பிறகும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிகிறது.
அவற்றை நிரப்பும் வகையில் அனைத்து மாநிலங்களில் உள்ள காலி இடங்களின் விவரங்களை என்எம்சி கேட்டுப் பெற்றுள்ளது.
இதனிடையே, அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள பிடிஎஸ் இடங்களுக்கு மட்டும் இரு சுற்று சிறப்பு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில இடங்களுக்கும் அத்தகைய அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.

