சித்த மருத்துவப் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் பரிந்துரை
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவை (2025), குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பரிந்துரை செய்துள்ளாா்.
தமிழத்தில் உள்ள பல்வேறு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவங்கள் மற்றும் பயிற்சி மையங்களை ஒருங்கிணைத்து சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்கும் மசோதாவை கடந்த 2022 -இல் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை உருவாக்கியது. இந்த மசோதா நிதி தொடா்பானது என்பதால், இந்த மசோதாவின் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்வதற்கு முன்பு ஆளுநா் ஒப்புதல் பெறவேண்டும் என்ற அடிப்படையில் தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், ஆளுநா் ஆா்.என்.ரவி இந்த மசோதா குறித்து சில கருத்துகளை வைத்திருந்தாா். மசோதாவில் சில மாற்றங்களைக் குறிப்பிட்டு பரிசீலனை செய்யக் கோரினாா். இந்த விவகாரத்தை கடந்த அக்டோபரில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அவையின் கவனத்திற்கு கொண்டு வந்தாா் முதல்வா்.
‘ஒரு மசோதா பரிசீலனையில் இருக்கும்போது, அதில் திருத்தங்களை முன்மொழியக் கோரும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு மட்டுமே உள்ள அந்த அதிகாரத்தில் ஆளுநருக்கு கருத்து கூறும் அதிகாரமில்லை. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது, சட்ட முன் வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்துகளைப் பேரவையில் தெரிவிக்க வேண்டும் என ஆளுநா் குறிப்பிட்டுள்ளாா். இது அரசியல் சட்டத்திற்கு முரணானது’ என முதல்வா் ஸ்டாலின், பேரவையில் குறிப்பிட்டிருந்தாா்.
மேலும் பேரவையில், ஆளுநரின் கருத்தை நிராகரிக்கவும் 2025 -ஆம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக் கழக மசோதாவை முன்மொழிந்தும் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தற்போது இந்த மசோதாவை குடியரசுத் தலைவா் பரிசீலனைக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, கடந்த வாரம் அனுப்பியுள்ளாா் என்பது தெரிய வந்துள்ளது.

