

திமுக - காங்கிரஸ் கூட்டணி, நீதித்துறையை மிரட்ட முயற்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியதாக தமிழக அரசு குற்றம்சாட்டி இருந்தது.
இந்த நிலையில், இன்றைய மக்களவை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா கூட்டணி எம்பிக்கள், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரும் தீர்மான நோட்டீஸை வழங்கினர்.
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,
"நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும்!
தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைத் தனது தீர்ப்பின் மூலம் நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர இண்டி கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்திருப்பது வெட்கக்கேடானது!
இந்தக் கூட்டணியின் தலைமையான காங்கிரஸ் அவசரச் சட்டம் மூலம் நமது நாட்டையே இருண்ட காலத்தில் தள்ளி அரசியலமைப்புச் சட்டத்தையே உருக்குலைத்துப் போட்டதை இன்றும் மக்கள் கொடுங்கனவாக எண்ணி நடுங்குகிறார்கள்.
இதே கூட்டணியின் தமிழக முகமான திமுக தான் நூற்றாண்டுக் கோயில்களை இடித்தேன் என்று சொல்பவர்களை மூத்தத் தலைவர்களாகவும், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் “கறுப்பர் கூட்டங்களைத்” தொண்டர்களாகவும் வைத்திருக்கிறது.
ஆக, ஜனநாயக தேசத்தில் வழிபாட்டு உரிமையை முடக்க நினைக்கும் பாசிச திமுக அரசின் முயற்சியை நீதி முறியடித்தது அவர்களுக்குப் பேரிடிதான்!
அதனால்தான் இப்பொழுது அந்த நீதிக்கே வாய்ப்பூட்டு போட நினைக்கிறது இந்த மக்கள்-விரோத கும்பல்! இது அவர்களது அரசியல் பிழைப்பிற்காக இந்திய நாட்டின் ஜனநாயகத் தூணாக விளங்கும் நீதித்துறையையே அசைத்துப் பார்க்க நினைக்கும் ஒரு செயலாகும். இதை தேசிய ஜனநாயக் கூட்டணி முறியடிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.