நீதிமன்றம்
நீதிமன்றம் கோப்புப்படம்.

நீதிபதி பதவி நீக்க தீர்மானம்: கடந்த காலங்களில் என்ன நடந்தது?

கடந்த காலங்களிலும் இதுபோன்று நீதிபதிகளுக்கு எதிரான நோட்டீஸ் மற்றும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
Published on

நமது சிறப்பு நிருபர்

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மான நோட்டீஸை மக்களவைத் தலைவரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அளித்த நிலையில், கடந்த காலங்களிலும் இதுபோன்று நீதிபதிகளுக்கு எதிரான நோட்டீஸ் மற்றும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

அந்த நிகழ்வுகளில் என்ன நடந்தது என்பது குறித்த விவரம்: 1993 - பஞ்சாப்- ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி. ராமசுவாமிக்கு எதிரான தீர்மானம் மக்களவையில் முன்மொழியப்பட்டு மூன்றில் இரண்டு பங்கு வாக்கைப் பெறாததால் தோல்வியடைந்தது.

2011 - கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென்னுக்கு எதிராக மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பதவி விலகினார்.

2015 - குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜே.பி. பார்திவாலா, இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பில் ஆட்சேபகர கருத்துகளை வெளியிட்டதால் அவரை நீக்கக் கோரும் நோட்டீஸில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 58 பேர் கையொப்பமிட்டனர். பிறகு தீர்ப்பில் உள்ள சர்ச்சை வார்த்தைகளை அவர் நீக்கியதால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.

2015 - மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கங்கலே மீதான பாலியல் குற்றச்சாட்டையடுத்து அவரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தில் மாநிலங்களவையின் 50 உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர்.

அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என விசாரணைக் குழு கூறியதால் தீர்மானம் கைவிடப்பட்டது.

2017 - ஆந்திரம், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. நாகார்ஜுனா ரெட்டியை பதவி நீக்க கையொப்பமிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேரில் 9 பேர் திரும்பப் பெற்றுக்கொண்டதால் தீர்மானம் வலுவிழந்தது.

2018 - அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பதவி நீக்க வரைவுத் தீர்மானத்தில் கையொப்பமிட்டனர். அதை மாநிலங்களவைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

2011 - சிக்கிம் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.டி. தினகரனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாநிலங்களவைத் தலைவர் குழுவை நியமித்து பதவி நீக்க நடைமுறைகள் தொடங்கப்படவிருந்த வேளையில், அவர் தனது பதவியில் இருந்து விலகினார்.

X
Dinamani
www.dinamani.com