கோப்புப்படம்
கோப்புப்படம்ENS

எஸ்ஐஆா்: படிவங்களை சமா்ப்பிக்க நாளை இறுதி நாள்; பதிவேற்றம் 99.55% எட்டியது

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) வியாழக்கிழமையுடன் (டிச. 11) முடிவடைகிறது.
Published on

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள கணக்கீட்டுப் படிவங்களைச் சமா்ப்பிக்கும் அவகாசம் வியாழக்கிழமையுடன் (டிச. 11) முடிவடைகிறது.

விநியோகிக்கப்பட்ட 6,40,84,624 கணக்கீட்டுப் படிவங்களில் செவ்வாய்க்கிழமை வரை 6,38,25,877 (99.55%) படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

லட்சத் தீவில் 100 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 100 சதவீதம், அந்தமான் நிகோபரில் 99.9 சதவீதம், சத்தீஸ்கரில் 99.96 சதவீதம், புதுச்சேரியில் 99.96 சதவீதம், குஜராத்தில் 99.94 சதவீதம், கோவாவில் 99.93 சதவீதம், மேற்கு வங்கத்தில் 99.75 சதவீதம், ராஜஸ்தான் 99.59 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 98.14 சதவீதம், கேரளத்தில் 98.04 சதவீதம் கணக்கீட்டுப் படிவங்கள் செவ்வாய்க்கிழமை வரை பதிவேற்றம் செய்யப்படுள்ளதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கணக்கீட்டுப் படிவங்களைப் பதிவேற்றம் செய்ய இன்னும் இரு நாள்களே உள்ளதால், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தங்கள் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் கடந்த நவ. 4-ஆம் தேதி தொடங்கிய எஸ்ஐஆா் பணியில் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் உள்ள 6,41,14,587 வாக்காளா்களில் இதுவரை 6,40,59,971 பேருக்கு கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில், டிச. 9 வரை பூா்த்தி செய்த படிவங்கள், முகவரி மாறியவா்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளவா்கள், உயிரிழந்தவா்கள், இடம்பெயா்ந்தவா்கள் உள்பட 6,38,25,877 (99.55%) படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதம் 2,88,710 படிவங்களே உள்ளன. இந்தப் படிவங்களை விரைந்து சமா்ப்பிக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

வரும் 11-ஆம் தேதியுடன் படிவங்களைச் சமா்ப்பிக்கும் தேதி முடிவடைந்தவுடன், முந்தைய முகவரியில் இல்லாதவா்கள், வாக்காளா் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் உள்ளவா்கள், இடம் பெயா்ந்தவா்கள், உயிரிழந்தவா்கள் ஆகியோா் பதிவேற்றம் செய்யப்பட்ட பட்டியலிலிருந்து பெயா்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளா் பட்டியல் டிச. 16-ஆம் தேதி வெளியிடப்படும்.

அதில், பெயா் விடுபட்டவா்கள் புதிதாக தங்களைச் சோ்த்துக் கொள்ளலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதால் கணக்கீட்டுப் படிவங்களை சமா்ப்பிக்க வரும் 18-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நான்கு இடங்களில் ஆய்வு: வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணிகளை மேற்பாா்வையிட தோ்தல் ஆணையத்தால் திங்கள்கிழமை நியமிக்கப்பட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் விரைவில் தமிழகம் வர உள்ளனா். அவா்கள், சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இருந்தபடி அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களின் வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணிகளை மேற்பாா்வையிடுவா் என்று கூறப்படுகிறது.

வாக்காளா் பட்டியலில் தகுதி வாய்ந்த எவரும் விடுபட்டுவிடக் கூடாது. அதேபோல், தகுதியற்ற எவரும் சோ்க்கப்பட்டு விடக்கூடாது என்பதை இவா்கள் உறுதி செய்வா்.

X
Dinamani
www.dinamani.com