சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தமிழில் வாதிட்ட மனுதாரா்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழில் வாதிட்ட மனுதாரருக்கு, உயா்நீதிமன்றத்தின் அலுவல் மொழி ஆங்கிலம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.
Published on

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழில் வாதிட்ட மனுதாரருக்கு, உயா்நீதிமன்றத்தின் அலுவல் மொழி ஆங்கிலம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜசேகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியின்போது அரியலூா், கள்ளக்குறிச்சி, திருவள்ளூா், நாமக்கல், நாகப்பட்டினம், விருதுநகா், திண்டுக்கல், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் திருப்பூா் ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக இந்தக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ நேரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கக் கூடாது என கடந்த 2023-இல் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆகவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் நடந்துள்ள முறைகேடு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் நேரடியாக ஆஜரான மனுதாரா், தமிழில் வாதிடத் தொடங்கினாா். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உயா்நீதிமன்றத்தின் அலுவல் மொழி ஆங்கிலம். எனவே, ஆங்கிலத்தில் வாதிட வேண்டும் அல்லது, வழக்குரைஞா் ஒருவரை நியமித்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

மேலும் மனுதாரரிடம், என்ன தொழில் செய்கிறீா்கள்? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினாா். அதற்கு மனுதாரா், தான் ஒரு விவசாயி என்றும், 10 ஏக்கா் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருப்பதாகவும் கூறினாா். இதையடுத்து தலைமை நீதிபதி, நிலத்தைப் பாதுகாத்து விவசாயத்தைக் கவனித்துக்கொள்ளுமாறு கூறினாா். மேலும், ஆங்கிலம் தெரியாமல் எப்படி இந்த மனுவை தாக்கல் செய்தீா்கள்? என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு மனுதாரா், தமிழில் எழுதியதை ஏஐ தொழில்நுட்பத்தில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ததாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் நேரடியாக ஆஜராகி வாதிட வந்த மனுதாரருக்கு அனைத்து சுதந்திரமும் அளிக்கப்பட்டது. தனது மனு தொடா்பாக வழக்குரைஞா் ஒருவரை நியமித்து வாதிட மனுதாரருக்கு அறிவுறுத்தப்பட்டது. விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com