

நமது சிறப்பு நிருபர்
இந்திய விடுதலை வரலாற்றில் மறைக்கப்பட்ட எண்ணற்ற தமிழர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டியது மத்திய அரசின் கடமை என்று மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா பேசினார்.
வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழாவையொட்டி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் அவர் பேசியதாவது: விடுதலைப் போராட்ட வீரர்களான திலகர், சுபாஷ் சந்திர போஸ் என வடமாநிலங்களில் போராடியவர்களை தமிழகத்தில் கொண்டாடுவதுபோல வட மாநிலங்களில் வ.உ.சிதம்பரனாரையோ, பாரதியாரையோ, வீரபாண்டிய கட்டபொம்மனையோ யாருக்காவது தெரியுமா?
திமுக ஒரு மாநிலக் கட்சிதான். ஆனால், எந்த நிலையிலும் தேச விடுதலைக்காகப் போராடியவர்களைக் கைவிட்டதில்லை. அடையாளம் காட்டத் தவறியதில்லை. நெல்கட்டும்செவல் என்ற பாளையத்தை ஆண்ட பூலித்தேவன் முழங்கிய வெள்ளையனே வெளியேறு முழக்கம்தான் 1942-இல் இந்தியாவைவிட்டு வெளியேறு முழக்கமாக மாறியது. அவருக்குப் பின்னால் வந்த வீரபாண்டிய கட்டபொம்மன், நீங்கள் வரிகொடா இயக்கம் என்று அழைக்கும் போராட்டத்துக்கே முன்னோடி. 1760-இல் பிறந்து 1799-ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டார்.
திப்பு சுல்தான், ஹைதர் அலி ஆகியோரின் துணையோடு எத்தனை முறை வெள்ளையர்களை சிவகங்கையை ஆண்ட வேலுநாச்சியார் விரட்டினார் என்பது பற்றி அமைச்சர் முருகனுக்கும் அவைத் தலைவரான உங்களுக்கும் தெரியும். ஆனால், குறைந்தபட்சம் எனது பக்கத்து மாநிலத்துக்காரரான அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷிக்காவது தெரியுமா?
ராணி லட்சுமி பாய் பற்றி பேசும் உங்களுக்கு குயிலி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை பற்றி தெரியாது.
விடுதலைப் போராட்ட போராளி பத்மாசினி பற்றியாவது இவர்களுக்குத் தெரியுமா? நேதாஜிக்கு முன்னோடியாக விளங்கிய செண்பகராமன் பிள்ளையையாவது அறிவார்களா? வரலாறு மறைத்து எழுதப்பட்டுள்ளது. அதை திருத்தி சரியாக எழுதுங்கள். இவர்களைப் பற்றி மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடப் புத்தகங்களில் இடம்பெறச்செய்து உங்கள் கடமையை சரிவர நிறைவேற்றுங்கள் என்றார் திருச்சி சிவா.
அமைச்சர் எல்.முருகன் - எம்.பி. கடும் வாக்குவாதம்: கோபமடைந்த மாநிலங்களவைத் தலைவர்
மாநிலங்களவையில் திருச்சி சிவா பேசிக் கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஆரம்பத்தில் இருந்தே தவறான தகவல்களைப் பதிவு செய்து அவையை தவறாக வழிநடத்துகிறார் என்று குற்றஞ்சாட்டினார். அவரைச் சமாதானப்படுத்தி இருக்கையில் அமருமாறு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பலமுறை அறிவுறுத்தியபோதும் தமிழிலேயே பேச்சைத் தொடர்ந்தார் அமைச்சர் முருகன்.
அமைச்சர் முருகனுக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் வெளியிட்ட கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக மாநிலங்களவைத் தலைவர் அறிவித்தார். அப்போது தனது பேச்சின் குறுக்கே இடைமறிக்க எவ்வாறு அமைச்சரை அனுமதிக்கலாம் என்று திருச்சி சிவா மாநிலங்களவைத் தலைவரை நோக்கி கேள்வி எழுப்பினார். ஒருதலைப்பட்சமாக நடப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, "அப்படியெல்லாம் கூறக் கூடாது' என்று கோபத்துடன் மாநிலங்களவைத் தலைவர் குறிப்பிட்டு, இரு தரப்பையும் அமைதி காக்குமாறு எச்சரித்தார். இருப்பினும் அமைச்சர் முருகன் பேச்சைத் தொடர்ந்தபோது, "என்னுடன் விவாதிக்க உங்களுக்கு உரிமை கிடையாது' என்று திருச்சி சிவா குறிப்பிட்டார். மீண்டும் மாநிலங்களவைத் தலைவர் எச்சரித்ததும் திருச்சி சிவா சமாதானமாகி, எனது அன்பான சகோதரரே அமைச்சரே (எல்.முருகனை நோக்கி), நீங்கள உட்காருங்கள் என்று கூறி, சுதந்திரப் போராட்ட வீரர் செண்பகராமனின் பெயரை அடுத்த போர்க் கப்பலுக்காவது சூட்டி மரியாதை செலுத்துங்கள் என்று தமிழிலேயே பேசி உரையை நிறைவு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.