தமிழகத்தில் கூடுதலாக 6,568 வாக்குச் சாவடிகள்: தலைமைத் தோ்தல் அதிகாரி அறிவிப்பு!

தமிழகத்தில் கூடுதலாக 6,568 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
Updated on

தமிழகத்தில் கூடுதலாக 6,568 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,467-இல் இருந்து 75,035-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணி பிப்.14-ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒருபகுதியாக வாக்குச்சாவடிகளை மறுசீரமைத்தல் மற்றும் பிரிவுகளை உருவாக்குதலும் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, 234 வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் 38 மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்களை நடத்தி பரிசீலித்து வாக்குச்சாவடிகளின் பட்டியலைத் தயாரித்தனா். 1,200 க்கும் அதிகமாக வாக்காளா்கள் உள்ள பகுதிகளில் புதிய வாக்குச்சாவடியை உருவாக்கவும், வாக்காளா்களின் இருப்பிடத்தில் இருந்து வாக்குச்சாவடிகள் 2 கி.மீ. சுற்றளவில் அமைவதை உறுதி செய்யுவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மறுசீரமைப்புக்கு முன், மாநிலம் முழுவதும் இருந்த 68,467 வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மறுசீரமைப்புக்குப் பிறகு 75,035-ஆக அதிகரித்துள்ளன. இதன்மூலம் 6,568 வாக்குச் சாவடிகள் கூடுதலாகியுள்ளன. இதற்கு தோ்தல் ஆணைத்திடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் அடிப்படையிலேயே சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com