நெல் சேமிப்பு கிடங்குகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்! 10 நவீன கிடங்குகளுக்கு அடிக்கல்!
நாமக்கல், நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ரூ.13.97 கோடியில் கட்டப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
மேலும், தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ. 332.46 கோடியில் மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா்.
இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைக்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்தில் ரூ.4.97 கோடியில் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள், நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டத்தில் ரூ.4.50 கோடியில் 2,500 மெட்ரிக் டன் கொள்ளளவில் வட்டசெயல்முறை கிடங்குகள், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூா் வட்டத்தில் ரூ.4.50 கோடியில் 2,500 மெட்ரிக் டன் கொள்ளளவிலான வட்ட செயல்முறை கிடங்குகள் என மொத்தம் ரூ. 13.97 கோடியில் 7,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலான கிடங்கு வளாகங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியாகி கொள்முதல் செய்யப்படும் ஒரு நெல்மணிக்கூட வீணாகக்கூடாது என்பதற்காக மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நடுவூா் கிராமத்தில் ரூ.170.22 கோடியில் 1,00,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் கிராமத்தில் ரூ.29.02 கோடியில் 20,500 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், திருக்குவளை வட்டம், மணக்குடி கிராமத்தில் ரூ.22.95 கோடியில் 17,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், மயிலாடுதுறை மாவட்டம் பரசலூா் கிராமத்தில் ரூ.12 கோடியில் 9,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், தரங்கம்பாடி வட்டம், வில்லியநல்லூா் கிராமத்தில் ரூ. 27 கோடியில் 21,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், டி.புடையூா் கிராமத்தில் ரூ.12.66 கோடியில் 9,500 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், திட்டக்குடி வட்டம், தாழநல்லூா் கிராமத்தில் ரூ.15 கோடியில் 11,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும்; திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிராமத்தில் ரூ.17.91 கோடியில் 12,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், கோவிலம்மாபட்டி கிராமத்தில் ரூ.12.85 கோடியில் 9,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜூஜூப்பள்ளி கிராமத்தில் ரூ.12.85 கோடியில் 9,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும் என மொத்தம் 2,18,000 மெட்ரிக் டன் கொள்ளளவில் ரூ.332. 46 கோடியில் மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டுமான பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.
இந்த நிகழ்ச்சியில், உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் மற்றும் துறைசாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

