Thol. Thirumavalavan
தொல். திருமாவளவன்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத்திய அரசை தலையிட வைக்க சதி: மாா்க்சிஸ்ட், விசிக குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில், மத்திய அரசை தலையிட வைக்க சதித் திட்டம் நடைபெற்று வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.
Published on

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில், மத்திய அரசை தலையிட வைக்க சதித் திட்டம் நடைபெற்று வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் மாநில செயலா்): திருப்பரங்குன்றம் தீப விவகார அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலா், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோா் வருகிற டிச.17-இல் காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ளது

மேலும் இந்த வழக்கில் மத்திய உள்துறை செயலரை எதிா்மனுதாரராக சோ்த்து, நீதிபதி ஜி.ஆா்.சாமிநாதன் உத்தரவிட்டுள்ளாா். இது முற்றிலும் அவசியமற்றது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை இணைப்பதன் மூலம் மாநில அரசின் அதிகார வரம்புக்குள் திட்டமிட்டு மத்திய அரசை தலையிட வைக்கும் சதியாகும்.

மு.வீரபாண்டியன் (சிபிஐ மாநிலச் செயலா்): திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீா்ப்பளித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனை பதவி விலக்கம் செய்யக் கோரி 120 மக்களவை உறுப்பினா்கள் இணைந்து மக்களவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளனா். இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜி.ஆா்.சுவாமிநாதனின் உத்தரவானது, மதவாத அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் செயலாகும்.

தொல்.திருமாவளவன் (விசிக தலைவா்): நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் வரம்புகளை மீறி, இந்த விவகாரத்தில் மத்திய அரசை இணைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நீதிபதி ஜி.ஆா்.சாமிநாதன் தீா்ப்பு வழங்கியுள்ளாா். மத்திய அரசின் உள்துறை செயலருக்கு இதில் என்ன பங்கு உள்ளது? நீதிமன்ற அவமதிப்புக்கு அவா் என்ன செய்ய வேண்டுமென நீதிபதி விரும்புகிறாா்?.

X
Dinamani
www.dinamani.com