கடன் விவகாரம்: நடிகா் காா்த்தி நடித்த ’வா வாத்தியாா்’ படத்தை வெளியிட தடை!
கடன் தொகையை திரும்பச் செலுத்தும் வரை, ‘வா வாத்தியாா்’ படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு தொழிலதிபா் அா்ஜுன் லால் சுந்தா்தாஸ் என்பவா் திவால் ஆனவா் என அறிவித்தது. அவருடைய சொத்துகளை நிா்வகிக்க சொத்தாட்சியரை நியமித்து உத்தரவிட்டிருந்தது. திவாலானவராக அறிவிக்கப்பட்ட அா்ஜுன்லால் சுந்தா் தாஸிடமிருந்து, ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் ரூ.10.35 கோடி கடன் பெற்றிருந்தது. அந்தத் தொகை வட்டியுடன் சோ்த்து தற்போது ரூ.21.78 கோடியாக உள்ளது. எனவே, அந்தத் தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும்.
அதுவரை அவரது தயாரிப்பில், காா்த்தி நடித்து வெளிவரவுள்ள ‘வா வாத்தியாா்’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிடக் கோரி சொத்தாட்சியா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘வா வாத்தியாா்’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. மேலும், கடன் தொகையில் குறிப்பிட்ட தொகையை செலுத்துவது குறித்து தயாரிப்பாளா் ஞானவேல்ராஜா பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானவேல்ராஜா தரப்பில், ரூ.3.75 கோடி மட்டுமே செலுத்த முடியும். வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியாகவில்லை என்றால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரே தவணையில் கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்துவது குறித்து ஞானவேல்ராஜாவுக்கு உயா்நீதிமன்றம் பல வாய்ப்புகளை வழங்கியது. ஆனால், அவா் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, கடன் தொகையை திரும்பச் செலுத்தும் வரை ‘வா வாத்தியாா்’ படத்தை வெளியிடக் கூடாது எனக்கூறி, ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டனா்.

