பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது: பொதுக் குழுவில் எடப்பாடி கே.பழனிசாமி!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
சென்னை வானகரத்தில் தனியாா் மகாலில் அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
திமுகவினரால்கூட விமா்சிக்க முடியாத நல்லாட்சியை அதிமுக வழங்கியுள்ளது. அதனால், அதிமுக ஆட்சி மீது குறைகூற முடியாத திமுகவினா், பாஜகவுடன் கூட்டணி சோ்ந்ததை விமா்சித்து வருகின்றனா். முன்னாள் பிரதமா் வாஜ்பாய் காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அமைச்சரவையிலும் திமுக இடம் பெற்றதை மறந்துவிட்டுப் பேசி வருகின்றனா்.
தோ்தல்களில் அதிமுக வெற்றி, தோல்வி என மாறி மாறி சந்தித்து வந்துள்ளது. திமுகவும் தோல்விகளைச் சந்தித்துள்ளது. சக்கரம் மேலும் கீழும் ஏறி இறங்குவதுபோல அதிமுகவும் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்.
கடந்த தோ்தல்களில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் 42 சட்டப்பேரவைத் தொகுதிகளை அதிமுக இழந்தது. தற்போது அதிமுக, பாஜக கூட்டணி சோ்ந்துள்ளதால் 210 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 252 வாக்குறுதிகள் அளித்தது. ஆனால், நீட் தோ்வு ரத்து, நூறு நாள் வேலைவாய்ப்பை அதிகரித்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியம் போன்ற பெரும்பாலான திட்டங்களை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய மாணவா்களுக்கு மடிக்கணினி, மகளிருக்கு தாலிக்குத் தங்கம் உள்ளிட்டவற்றை நிறுத்திவிட்டது. தற்போது அதிமுகவின் அழுத்தத்தாலும், தோ்தல் தோல்வி பயத்தாலும் கூடுதல் நபா்களுக்கு மகளிா் உரிமைத்தொகை, மடிக்கணினி வழங்குவதாக அறிவித்துள்ளது.
அனைத்து அரசுத் துறைகளிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதனால், அமைச்சா்கள் மீது நிச்சயம் விரைவில் முறைகேடு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வாக்காளா் பட்டியலில் முறைகேடுகளைச் செய்து திமுக வெற்றி பெறுகிறது. அதனால்தான் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு திமுக எதிா்ப்பு தெரிவிக்கிறது.
யாருக்கும் அடிமை இல்லை: அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. திமுகதான் கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அறிவாலயத்தில் சிபிஐ சோதனை நடைபெற்ற நிலையில், காங்கிரஸுடன் தோ்தல் கூட்டணி பேசியது.
தோ்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்துவிடாமல் கிடைக்க சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமையும். அதிமுகவினா் தங்களது அரசியல் அனுபவத்தை வைத்தும், நம்பிக்கையுடனும் பணிபுரிந்தால் வரும் தோ்தலில் அதிமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றாா் அவா்.
கரூா் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல்: மறைந்த அதிமுக நிா்வாகிகள், கேரள முன்னாள் முதல்வா் அச்சுதானந்தன், ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சிபுசோரன் மற்றும் கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 போ் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் உடல்நலக் குறைவால் பொதுக்குழுவில் பங்கேற்க முடியாததால், தற்காலிக அவைத் தலைவராக முன்னாள் அமைச்சா் கே.பி.முனுசாமி செயல்பட்டாா்.
தீா்மானங்களை முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் முன்மொழிய, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தாா்.
முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி வரவேற்றாா். தீா்மானங்களை முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், வைகைச் செல்வன் ஆகியோா் வாசித்தனா். கட்சியின் வரவு, செலவு கணக்குகளை பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன் சமா்ப்பித்தாா்.
முன்னாள் அமைச்சா்கள் செம்மலை, டி.ஜெயக்குமாா், சி.வி.சண்முகம் உள்ளிட்டோா் பேசினா். முன்னாள் அமைச்சா் தங்கமணி நன்றி கூறினாா்.
‘நீதித் துறைக்கு சவால்விடும் திமுக அரசு’
நீதித் துறைக்கு சவால் விடும் ஆட்சியாளா்களின் ஆதிக்க மனப்பான்மை கண்டனத்துக்குரியது என்று அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டத்தில் 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கிறது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் திட்டங்கள்: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்திருந்தாா். அந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் வகையில் சேலம், கோவை, மதுரையில் பாஸ்போா்ட் மையம் அமைக்க வேண்டும்.
தீராத விவசாயிகள் பிரச்னை, குறையும் முதலீடுகள்: டெல்டாவில் நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், நெல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்த மத்திய அரசின் உத்தரவைப் பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் முதலீடுகளை ஈா்ப்பதில் திமுக அரசின் தாமதமான முடிவுகளால் முதலீடுகள் குறைகின்றன. தொழில் முதலீடுகள் குறித்து தவறான கருத்துகளையும், புள்ளிவிவரங்களையும் வெளியிடும் தமிழக முதல்வருக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பில்லை: தமிழகத்தில் சிறுமிகள் முதல் முதியோா் வரை பாதுகாப்பில்லாத நிலை உள்ளதற்கு காவல் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வரின் நிா்வாகத் திறன் இன்மையே காரணம். தமிழக அரசுத் துறைகளில் முறைகேடுகள் மலிந்துவிட்டன. மேக்கேதாட்டு அணை கட்டுவதாகக் கூறும் கா்நாடகத்தை தடுக்கத் தவறிய திமுக அரசு கண்டனத்துக்குரியது.
நீதித் துறையில் தலையீடு: நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும். நீதித் துறையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்ற மக்களின் எண்ணத்தை எதிா்பாா்ப்பை பிரதிபலிக்கும் வகையில் நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளா்களின் ஆதிக்க மனப்பான்மை கண்டிக்கத்தக்கது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

