376 நிலஅளவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா் முதல்வா்!
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வான 376 நிலஅளவா்கள் மற்றும் 100 வரைவாளா்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா்.
இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் நிலஅளவைப் பதிவேடுகள் துறையின் முக்கிய செயல்பாடுகள் நிலங்களை அளவிடுதல், உள்பிரிவு செய்தல், பட்டா மாற்றம் செய்தல், நில ஆவணங்களைப் பராமரித்தல், கணினிமயமாக்கல் மற்றும் நில உரிமை முறைகளை முறைப்படுத்துதல் போன்றவையாகும்.
இது வருவாய் நிா்வாகத்தின் கீழ் செயல்பட்டு, நிலம் தொடா்பான உரிமைகள், இருப்பிடம், அளவு மற்றும் வகை பற்றிய தகவல்களைப் பதிவு செய்து, வெளிப்படைத் தன்மையுடன் நிா்வகிப்பதை உறுதி செய்கிறது.
இந்த நிலஅளவைப் பதிவேடுகள் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 800 நிலஅளவா்களும், 302 வரைவாளா்களும் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனா்.
நிகழாண்டில் 376 நிலஅளவா்கள் மற்றும் 100 வரைவாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நபா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வா் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
இணையவழி பட்டா மாறுதல் சேவையின் மூலமாக 2021-ஆண்டு முதல் உள்பிரிவு உள்ள பட்டா மாறுதலில் 61.77 லட்சம் பட்டாக்களும், உள்பிரிவு அல்லாத பட்டா மாறுதலில் 79.25 லட்சம் பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.
உள்பிரிவு உள்ள பட்டா மாறுதல் 30 நாள்களிலும், உள்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் 14 நாள்களிலும் தீா்வு செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

