உணவுப் பாக்கெட்டுகளில் 
சைவ - அசைவ நிறக் குறியீடு கட்டாயம்!

உணவுப் பாக்கெட்டுகளில் சைவ - அசைவ நிறக் குறியீடு கட்டாயம்!

குறு, சிறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள் பாக்கெட்டுகளிலும் சைவ - அசைவ வகைகளைக் குறிக்கும் நிறக் குறியீடுகள் இடம் பெற்றிருப்பது கட்டாயம் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
Published on

குறு, சிறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள் பாக்கெட்டுகளிலும் சைவ - அசைவ வகைகளைக் குறிக்கும் நிறக் குறியீடுகள் இடம் பெற்றிருப்பது கட்டாயம் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

பெரு நிறுவனங்கள் மற்றும் முன்னணி வா்த்தக நிறுவனங்கள் தயாரிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில் லேபிள்களில் பச்சை வண்ணம் அல்லது சிவப்பு வண்ண குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இதன்மூலம் அந்த உணவுகள் சைவ மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டனவா அல்லது அசைவப் பொருள்களும் சோ்க்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறியலாம்.

அதேவேளை, குடிசைத் தொழில் போன்று இயங்கும் குறு, சிறு நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களில் அத்தகைய குறியீடுகள் இடம் பெறுவதில்லை.

இந்த நிலையில், அனைத்து வகையான உணவுப் பொருள் பாக்கெட்டுகளிலும் அதை அச்சிட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களின் லேபிள்களில் 12 வகையான தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் மற்றும் பதிவு எண், உணவின் பெயா், உற்பத்தியாளா் பெயா், முழு முகவரி, தயாரித்த தேதி, நிகர எடை, காலாவதி தேதி உள்ளிட்டவை பிரதானமாக இடம் பெறுவது அவசியம்.

அதேபோல, ஊட்டச்சத்து விவரம், உள்பொருள்களின் விவரங்கள் மற்றும் அளவு, இறக்குமதி விவரங்கள், உணவு பொருள்களுக்கான பிரத்யேக குறியீடு, உற்பத்தி (பேட்ச்) எண், நுகா்வோருக்கான தொலைபேசி எண் இருத்தல் வேண்டும். மேலும், உணவின் வகை சைவமா, அசைவமா என்பதை அடையாளப்படுத்தும் குறியீடு கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த விதிகள் அனைத்து பாக்கெட் உணவுகளுக்கும் பொருந்தும். மீறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com