

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை டெபாசிட் இழக்கச் செய்வதே எங்களின் லட்சியம் என்று தவெக நிா்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் சூளுரைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜகதான் எனத் தெரிவித்த அக்கட்சியின் தலைவர் விஜய், பிரசாரங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறார்.
இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், விஜய் ஒரு கவுன்சிலர் தேர்தலில்கூட போட்டியிட்டது இல்லை என்று விமர்சித்திருந்தார். தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்த கருத்தை அவர் முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில், ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை செங்கோட்டையன் பேசுகையில்,
”நயினார் நாகேந்திரன் எங்கிருந்து சென்றார், எத்தனை தேர்தலில் தோல்வியடைந்தார் என்பதெல்லாம் எனக்கு தெரியும். இன்றைக்கு அவர் சவால் விடுகிறார், ஒரு வார்டில்கூட ஜெயிக்க முடியாது என்கிறார்.
அவர் எங்கே நின்றாலும் டெபாசிட் இழக்கச் செய்வதே எங்களின் லட்சியம். யார் நமது காலை மிதிக்கிறார்களோ, யார் நம்மை தவறாக பேசுகிறார்களோ அவர்களுக்கு இளைஞர்கள் பாடம் புகட்ட வேண்டும்.
திருநெல்வேலியை விட்டு வேறு தொகுதியை நயினார் நாகேந்திரன் தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால், நமது தலைவர் எழுச்சி நாயகன் விஜய் எங்கு வேண்டுமானாலும் நிற்பார். 234 தொகுதியிலும் அவர்தான் சட்டப்பேரவை உறுப்பினர்.” எனத் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன், கடந்த மாதம் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.