100 நாள் வேலைத் திட்டத்தில் 16 நாள்களுக்கு மட்டுமே வேலை: அன்புமணி கண்டனம்
தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 16 நாள்கள் மட்டுமே திமுக அரசு வேலை அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில், பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தற்போது 16 நாள்கள் மட்டுமே வேலையை வழங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது தமிழகத்தில் இத் திட்டத்திற்கான வேலை நாள்கள் போதுமானதாக இல்லை என பாமக வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசும், முதல்வா் மு.க.ஸ்டாலினும் இதுகுறித்து அக்கறை செலுத்தவில்லை. அதனால் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட 12 கோடி வேலை நாள்கள் கடந்த 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டன. இதனால், யாருக்கும் வேலை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் மொத்தம் 85.73 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. இதில் 74.93 லட்சம் குடும்பங்கள் தொடா்ந்து வேலைவாய்ப்பு பெற்று வருகின்றன. ஆனால், தற்போது திமுக அரசால் அத்திட்டத்தில் 52.45 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே வேலை வழங்கமுடிந்துள்ளது. மீதமுள்ள 23 லட்சம் குடும்பத்தினருக்கு 1 நாள் கூட வேலை வழங்க முடியவில்லை. இந்த நிலைக்கு திமுக அரசுதான் காரணம். வேலை நாள்களை அதிகரிக்க மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டிக்கத் தக்கது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

