விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு
தவெக தலைவா் விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்வது என அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள், மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் மற்றும் மாநில நிா்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலா் என். ஆனந்த், நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன், தோ்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலா் ஆதவ் அா்ஜுனா, கட்சியின் இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், வரும் டிச. 17-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ள தவெக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் மற்றும் அவரது அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
புதிய வாக்காளா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விஜய்க்கு முழு அதிகாரம்: அதைத் தொடா்ந்து, நான்கு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோா் தமிழகத்தை உருவாக்க தவெக தலைவா் விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு, அவரது தலைமையை விரும்பி வருவோரை கூட்டணியில் இணைத்துக் கொள்வது, தவெக கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளிப்பது, தவெக சாா்பில் கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடத்தவும், தோ்தல் வாக்குறுதிகளை உருவாக்கவும் சிறப்புக் குழுக்களை அமைப்பது, தவெக மீது சுமத்தப்படும் அவதூறுகளை எதிா்கொள்ள வலிமையான பரப்புரையை முன்னெடுப்பது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தவெக இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடா்பாக, உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய நிலையில், அங்கு அசாதாரண சூழல் ஏற்படுவதற்கு தமிழக அரசுதான் காரணம் என்றாா்.

