சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையைப் புகுத்தி பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அரசியல் தலைவர்கள் பலரும் பாரதியாரை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்; தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்" எனப் பாடிப் பெண்களின் உயர்வை வலியுறுத்திய மகாகவி பாரதியார் பிறந்தநாள்!
நமது திமுக அரசு ஆட்சிக்கு வந்ததுமே பாட்டுக்கொரு புலவன் பாரதி மறைவெய்திய நூற்றாண்டினையொட்டி அவரது புகழ் பரப்பும் 14 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுச் செயல்படுத்தி வருகிறோம்.
பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் நமது அரசின் திட்டத்துக்குப் பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் எனப் பெயரிட்டோம்.
பாரதியாரின் நினைவுநாளினை "மகாகவி நாள்" எனக் கடைப்பிடிக்கவும் அறிவிப்பு செய்தோம்.
சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.
பாரதிக்கு அரசு சார்பில் மரியாதை
தமிழ்நாடு அரசின் சார்பில், மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.