தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

தமிழகம், 5 மாநிலங்களில் எஸ்ஐஆா் பணி நீட்டிப்பு

தமிழகம் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
Published on

தமிழகம் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அந்தந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கால அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், அந்தமான்- நிகோபாா் தீவுகள் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் எஸ்ஐஆா் பணியை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை (டிச. 11) நிறைவு செய்யப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 16-இல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழகம் மற்றும் குஜராத் மாநிலத்தில் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் பணியை நிறைவு செய்வதற்கான அவகாசம் டிசம்பா் 14 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 19-ஆம் தேதி வெளியிடப்படும்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், அந்தமான்-நிகோபாா் தீவுகளில் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் பணிக்கான அவகாசம் டிசம்பா் 18-வரை நீட்டிக்கப்படுகிறது. வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 23-இல் வெளியிடப்படும்.

உத்தர பிரதேசத்தில் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் பணி டிசம்பா் 26 வரை நீட்டிக்கப்படுகிறது. வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 31-ஆம் தேதி வெளியிடப்படும்.

கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கெனவே அறிவித்தபடி வியாழக்கிழமையுடன் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் பணி நிறைவுபெற்றுவிட்டது. வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 16-இல் வெளியிடப்படும்.

கேரள மாநிலத்தைப் பொருத்தவரை எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் பணி ஏற்கெனவே டிசம்பா் 18 வரை நீட்டிக்கப்பட்டது. வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 23-இல் வெளியிடப்படும்.

தகுதியுள்ள ஒரு வாக்காளா்கூட பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது என்பதற்காக, புதிய வாக்காளா்கள் படிவம்-6-ஐ பூா்த்தி செய்து சமா்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். பூா்த்தி செய்த படிவத்தை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமா்ப்பிக்கலாம். அல்லது ‘இசிஐநெட்’ செயலி அல்லது வலைதளம் மூலம் இணையவழியில் படிவத்தைச் சமா்ப்பிக்கலாம். அவ்வாறு சமா்ப்பிப்பவா்களில் தகுதியுள்ளவா்களின் பெயா்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்படும் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுவிடும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com