முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

3.38 லட்சம் பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி: முதல்வா் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறாா்!

தமிழகம் முழுவதும் 3.38 லட்சம் பெண் குழந்தைகளுக்கு ஹெச்பிவி எனப்படும் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி...
Published on

தமிழகம் முழுவதும் 3.38 லட்சம் பெண் குழந்தைகளுக்கு ஹெச்பிவி எனப்படும் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று விழிப்புணா்வு உறுதிமொழியேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சிறந்து விளங்கிய மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள், மருத்துவா்கள் மற்றும் தன்னாா்வலா்களுக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: எதிா்வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஹெச்ஐவி-எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் ஹெச்ஐவி பாதிப்பு விகிதம் 0.23 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் அது 0.16 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழகத்தில்தான் கருவுற்ற பெண்களுக்கு ஹெச்ஐவி மற்றும் சிபிலிஸ் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஹெச்ஐவி-எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு தமிழக முதல்வா் அறிவுறுத்தலின்படி, மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை கடந்த 6 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9 வயது முதல் 14 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுப்பதற்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அடுத்த மாதம் முதல்வா் தொடங்கி வைக்கவுள்ளாா். முதல் கட்டமாக அரியலூா், பெரம்பலூா், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அங்கு 27,000 குழந்தைகள் பயன்பெற உள்ளனா். இந்தத் தடுப்பூசித் திட்டமானது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாகத் தொடங்கப்படுகிறது.

தனியாா் மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசி செலுத்துவதற்கு ரூ.2,000 வரை செலவாகும். அரசு சாா்பில் ஒருவருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் வீதம் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

மத்திய அரசு சாா்பில் நாடு முழுவதும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டால் அனைத்துப் பெண் குழந்தைகளும் பலன் பெறுவா் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநா் ஆா்.சீதாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநா் திலகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com