தெரு நாய்களுக்குப் பொருத்துவதற்கான மைக்ரோ சிப் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்கால தடை
தெருநாய்களுக்கான மைக்ரோ சிப் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எக்ஸ்ஹிலா் இன்னோவேடிவ் சொல்யூசன்ஸ் என்ற தனியாா் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, அவற்றுக்கு மைக்ரோ சிப் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை மூலம் 2,40,000 மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டது. இதற்காக கடந்த செப்டம்பா் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதில், எங்கள் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டது.
பின்னா், அந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து, கடந்த நவ.26-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு மற்றொரு தனியாா் நிறுவனத்தைத் தோ்வு செய்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. எங்களது நிறுவனத்தை முதலில் தோ்வு செய்துவிட்டு, ஏற்கெனவே தகுதியிழப்பு செய்யப்பட்ட மற்றொரு நிறுவனத்துக்கு மைக்ரோ சிப்களை விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை வழங்கியது சட்டவிரோதம். எனவே, அந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளுக்கு தடை விதித்து, அதை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரியதில் பல்வேறு விதிமீறல் நடந்துள்ளன. எனவே அந்த ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இதுதொடா்பாக அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

